நாங்க என்ன சொல்றோம்னா...: படை தலைவன்
தேர்ந்த சிற்பியிடம் சேராத கல்!'மோதிப் பார்...' என்று சவால்விடும் உயரம், ரவுத்திரம் பேசும் விழிகள், தோரணைக்கு ஏற்ற சிகை அலங்காரம், எதிரியின் நெஞ்சுவரை உயரும் கால் என சண்முக பாண்டியன், 'நான் சிலையாக தகுதியுள்ள கல்' என்று உணர்த்தி இருக்கிறார்! கதாபாத்திரத்தை உணராமல் பொம்மை யாக காட்சிக்குள் நிற்பது, வாய்ப்பாடு போல வசனங்களை ஒப்புவிப்பது என சில அனுபவமின்மை குறைபாடுகளை, இயக்க உளி சரியாக செதுக்கியிருந்தால் சிலை கிடைத்திருக்கும்!வளர்ப்பு யானை மணியனை தன்னிடம் இருந்து சதியால் பிரித்துக் கொண்டு போன கும்பலிடம் மோதி மணியனை மீட்க வேண்டியது சண்முக பாண்டியனின் பணி. அவருக்கு தந்தையாக வரும் கஸ்துாரி ராஜா அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தாங்கிக் கொள்கிறார். தொழில்நுட்ப உதவியால் ரமணா விஜயகாந்த் ஒரு காட்சியில் தோள் கொடுக்கிறார்! இளையராஜா... சண்டை காட்சிகளில் சண்முக பாண்டியனை உப்பு மூட்டையாக சுமந்திருக்கிறார். இப்படியாக சீனியர்களின் பங்களிப்பில் தன் பணியை சிரமமின்றி செய்திருக்கிறார் நாயகன்!யானைகளுக்கு மனிதர்கள் செய்யும் தீங்குகளைப் பற்றிப் பேச வேண்டிய இக்காலத்தில், 'யானை - மனிதன்' உறவை மகிமைப்படுத்தி திரைக்கதை இருப்பது நெருடல். 'கடவுளின் பெயரால் நிகழும் அநீதிகளை கடவுளை நம்பும் மக்களே ஒன்றுகூடி வீழ்த்துவார்கள்' என்ற சித்தரிப்புக்கு பாராட்டுகள்!காதல், காமெடி, சென்டிமென்ட் உள்ளிட்ட செயற்கை கலவைகளை புத்திசாலித்தனமாக தவிர்த்தவர்கள் கதைக்குரிய வலுவான காட்சிகளை உருவாக்கத் தவறியிருக்கின்றனர். 'விஜயகாந்தின் வாரிசு' என்கிற அடையாளம் மட்டுமே போதுமா என்ன?ஆக...'ராஜ்யசபா' கனவும் தள்ளிப் போகிறது... 'நட்சத்திர நாயகன்' கனவும் தள்ளிப் போகிறது!