உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: கேம் சேஞ்சர் (தெலுங்கு)

காலம் மாறிவிட்டது ஷங்கர்!ஷங்கரின் நாயகர்கள் ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தபோது, 'இதெல்லாம் இவர் படத்துலதான் நடக்கும்' என சாமானிய ரசிகர்கள் பெருமூச்சு விட்டது ஒருகாலம். மீண்டும் அப்படியொரு பாராட்டை இக்கால ரசிகர்களிடம் பெற ஷங்கர் எடுத்திருக்கும் முயற்சியே... கேம் சேஞ்சர்!விசாகப்பட்டினத்தின் நேர்மை ஐ.ஏ.எஸ்., ராம் நந்தனுக்கும் அரசியல்வாதி மோப்பிதேவிக்கும் முட்டிக்கொள்கிறது. ஊழலுக்கு எல்லா வழியிலும் 'செக் மேட்' வைக்கிறார் ராம் நந்தன். சதியால் முதல்வராக மோப்பி நினைக்கையில், மாநில தேர்தல் அதிகாரியாகிறார் ராம். வெல்வது யார்?அதிகார மோதலை அடிப்படையாக கொண்ட திரைக்கதையில் அளவுக்கு மீறி தன் மசாலா கலந்திருக்கிறார் ஷங்கர். தன் படத்தில் சோக 'ப்ளாஷ்பேக்' இருக்க வேண்டும் என்பதற்காக வம்படியாய் ஒரு ப்ளாஷ்பேக். வழக்கம் போல் பாடல் காட்சிகள் பிரமாண்டமாய் இருக்க வேண்டும் என்பதற்காக சில ஜிகினா பாடல்கள். 'என் படத்தில் சமூக கருத்து இல்லாமலா...' என்பதற்காய் சுபம் போட்ட பிறகும் அறிவுரை அறிவிப்புகள்!இப்படியான 'ஷங்கர் மசாலா'வுடன் கூடுதலாக 'தெலுங்கு மசாலா' கலந்தால்... அஜித்தின் 'ஏலே கலெக்டரே... என் வவுரு எரியுதுலே' வசனம்தான் நினைவிற்கு வருகிறது. சகோதரனுக்கான முதலிரவு அறையை நாயகன், நாயகி அலங்கரிக்கையில் டூயட்டுக்கு லீட் எடுப்பது உள்ளிட்ட காட்சிகளில் பழைய கஞ்சி வாடை!என்னதான் சினிமா என்றாலும்... ஓட்டு எண்ணிக்கைக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 'ட்ரோன்கள்' மூலம் மொத்தமாய் இடம் மாற்றும் காட்சி, திருப்பதிக்கு மொட்டை போடும் தரமான சம்பவம். ஒரு கதாபாத்திரம் பக்கவாட்டில் பார்த்தபடி நடப்பது... வித்தியாசமாம்! காலம் மாறிவிட்டது ஷங்கர்.ஆகஹலோ... வேள்பாரி அய்யாவா... பார்த்து சூதானமா இருங்கய்யா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !