நாங்க என்ன சொல்றோம்னா...: காந்தாரா: ஏ லெஜண்ட் சாப்டர் - 1 (கன்னடம்)
முந்தைய பாகம் எட்டடி பாய, இது நான்கடி பாய்ந்திருக்கிறது! காந்தாரா வனத்தில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டத்தை அபகரிக்கும் பாங்க்ரா வம்ச மன்னன்; வனத்தின் காவல் தெய்வங்கள் பஞ்சுருளி, குலிகாவை கட்டுப்படுத்த நினைக்கும் கடபா குழுவினர்; இவர்களின் சதியை காந்தார வனமக்களின் தலைவனான பெர்மே எதிர்கொள்ளும் கதை! பழங்குடி மக்களின் நில உரிமையை பறிக்கும் பண்ணையாரை எதிர்க்க, மக்களுக்கு உதவும் வன தெய்வங்களை வைத்து முந்தைய பாகத்திற்கு பரவச திரைக்கதை அமைத்து இருந்தனர். இதில், 1,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடி மக்களின் மூதாதையர்கள் மன்னனை எதிர்த்து செய்த போர் குறித்து இயக்கி இருக்கின்றனர். கடந்த பாகத்தில் திருவிழாவில் சாமி ஆடுபவரின் ஒப்பனை, நடனம், அவர் எழுப்பும் சப்தம் என மக்களின் வாழ்க்கை சார்ந்த அம்சங்களை கொண்டு வசீகரித்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி, இதில் கட்டுப்பாடு இழந்து ஓடும் தேர் மீது பெர்மேவின் பராக்கிரமம் மற்றும் சாகசங்களை அதிகம் நம்பியிருக்கிறார்! பஞ்சுருளியும் குலிகாவும் சிவனின் பூத கணங்கள், சிவன் தியானம் செய்ய பார்வதி தேவி படைத்தது ஈஸ்வர பூந்தோட்டம், பரசுராமர் உருவாக்கிய நிலம் காந்தாரா, விஷ்ணுவின் வராக அவதாரம் தான் பஞ்சுருளி, குலிகாவின் சகோதரியே சாமுண்டி என நிரம்பி வழியும் புராண குறிப்புகள் குழப்பம் தருகின்றன! வி.எப்.எக்ஸ்., வேலைப்பாடுகளால் தீப்பிழம்பு தெய்வமாக மாறுவதும், புலி கம்பீரமாய் உலவுவதும் தொழில் நுட்பத்தை கொண்டாடும் அற்புதங்கள்! பிரமாண்ட காட்சிகள், புராண தகவல் கள் அளவிற்கு கதையில் அழுத்தம் இல்லை; இதை நன்கு மெருகேற்றி அலங்காரங்களை குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.ஆக.....வெறும் கையில் முழம் போடும் படம்; கையில் தங்கமுலாம் பூசப்பட்டு இருக்கிறது!