உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: ஹிட்: தி தேர்டு கேஸ் (தெலுங்கு)

'லைப் ஜாக்கெட்' அணிந்து நீந்தி கடக்க வேண்டிய படம்!வனத்திற்குள் ஒருவனை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தறுத்து, மண்டையில் ஒரு வெட்டு போட்டு உள்ளிருக்கும் சுரப்பிகளை பிரித்தெடுக்கிறார் நாயகன் அர்ஜுன் சர்க்கார். ஒரு காவலர் இத்தகைய ரகசிய கொலைகளைத் தொடர்ந்து செய்வதற்கான காரணத்தை சொல்வது கதையின் அடுத்த கட்டம்! முந்தைய ஹிட் நாயகர்களைப் போலவே அர்ஜுன் சர்க்காருக்கும் மனநல சிக்கல்கள் இருக்கின்றன; இருப்பினும், ஒருபுறம் கொலை களை செய்தபடி காதலிக்க ஆள் தேடும் 'டேட்டிங்' அத்தியாயம் கலகல காக்டெய்ல்; ஆனால், நாயகி ஸ்ரீநிதி வந்ததும் பச்சை தண்ணீர் ஆகி விடுகிறது காக்டெய்ல். 'ப்ளாஷ்பேக்'கிற்குள் இன்னொரு 'ப்ளாஷ்பேக்' வந்தாலும் குழப்பாமல் விறுவிறுப்புடன் நகர்கிறது முதல்பாதி திரைக்கதை. நானியின் லேப்டாப்பை ஸ்ரீநிதி வேவு பார்க்கும் வினாடிப் பொழுது காட்சி கூட, 'ஓஹோ... கதை அப்படிப் போகுதா...' என்று நம்மையும் புலனாய்வு செய்யத் துாண்டுகிறது.ஐதராபாத்தைச் சேர்ந்த தன்னை சென்னைக்காரனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பீஹார் கொலைகாரனுக்கு அர்ஜுன் எடுக்கும் லத்தி பாடம்... மாஸ். 'இங்க இருக்குறதுக்கு உனக்கு தகுதியில்லை' என்று கொக்கரிக்கும் கதாபாத்திரத்திற்கு பதில் தரும் தொனியில், தெலுங்கு திரையுலகின் வாரிசு நாயகர்களுக்கான 'பஞ்ச்' பதிலடி... நானி காட்டும் பக்கா மாஸ்! புலனாய்வு பாதையில் இருந்து விலகிய இரண்டாம்பாதி இதை வழக்கமான மசாலா படமாக மாற்றி விட்டது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டத்தில் வரும் தமிழ் நாயகனின் அறிமுகம் நல்ல சர்ப்ரைஸ்! ரத்த ஆற்றில் நீந்தியபடிதான் இப்படைப்பை கடக்க முடியும். அப்படியொரு அனுபவத்தின் மீது நாட்டம் இருந்தால் இதற்குள் தாராளமாய் குதிக்கலாம். ஆக...'ஓங்கி அடிச்சா...' என்று கத்தி சொல்லாமல் கத்தியால் சொல்கிறான் அர்ஜுன் சர்க்கார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !