நாங்க என்ன சொல்றோம்னா...: ஐடென்டிட்டி (மலையாளம்)
கொலைகாரனை விரட்டும் இன்னொரு கொலைகாரன்!சிறுவயது பாதிப்பால் தன்னிடம் அதீத துல்லியம் எதிர்பார்த்து வருத்திக் கொள்ளும் ஹரன் சங்கர்; ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட். மனிதர்களின் முகங்களை நினைவில் நிறுத்த முடியாத அலிஷா; ஒரு கொலை வழக்கின் சாட்சி. அலிஷா சொல்லும் தோராய அடையாளங்களை வைத்து கொலையாளியின் முகத்தை ஹரன் வரைய, அதில் தெரிவது ஹரனின் முகம். அலிஷா பார்த்த கொலைகாரனுக்கும் ஹரனுக்கும் என்ன ஒற்றுமை; ஹரனை காவல் அதிகாரி ஆலன் சந்தேகிப்பதன் நோக்கம் என்ன?ஆடையகத்தின் டிரையல் ரூம் சம்பவம் - ஹரனின் குடும்ப வரலாறு - அலிஷாவின் வருகை ஆகியவற்றிற்கு பிறகே கதை சீரான ஓடுதளத்திற்கு வருகிறது. இதற்குள்ளாகவே எட்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, அவர்களை கண்காணிக்கச் சொல்கிறது திரைக்கதை. ஹரனின் குடும்ப குழப்பம் புரியவே சற்று அவகாசம் தேவைப்படும் நிலையில் இந்த கண்காணிப்பு பணி 'எக்ஸ்ட்ரா டியூட்டி' ஆகி விடுகிறது! ஒருவருடைய மூக்கின் நீளம்தான் அவருடைய நெற்றியின் உயரம்; கண்ணின் அகலம் தான் புருவ இடைவெளியின் அளவு; தாடையுடன் ஒட்டாத காது மடல் உள்ளிட்ட பொதுவான குறிப்புகளை வைத்து, ஹரனின் பென்சில் தீட்டும் முதல் முகம் நமக்கு ஆச்சரியம் தருகிறது; இரண்டாவது முகம் அதிர்ச்சி கொடுக்கிறது; மூன்றாவது முகம் கவனத்தை சிதறடிக்கிறது! விமான விபத்தை தடுப்பது, கொலையின் பின்னணியில் மறைந்துள்ள 'மாபியா' கும்பல் வெளிப்பட காரணமாக இருப்பது என அலிஷாவுக்கு முக்கியத்துவம் இருப்பினும், அப்பாத்திரத்தில் அடையாளமற்று நிற்கிறார் த்ரிஷா. டோவினோ தாமஸ் முக்கால்வாசி கதையில் ஒருமாதிரி; மிச்சத்தில் வேறுமாதிரி! இதில், 'எங்க அண்ணன் யார் தெரியுமா' - சஸ்பென்ஸ் பில்டப் அநாவசியம்! இரண்டு க்ளைமாக்ஸ்; முதல் க்ளைமாக்ஸிலேயே அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடுவதால், இரண்டாவதில் நாயகனும், வில்லனும் கட்டிப்புரண்டு சண்டை மட்டும் செய்கின்றனர். ஊர் சுற்றும் சிற்றுந்தாக எங்கெங்கோ பயணித்துவிட்டு மையக்கதைக்கு வந்த இயக்குனர்கள், வண்டியை கொஞ்சமாவது தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டியிருப்பின் பயணம் சிறப்பானதாய் இருந்திருக்கும்.ஆக...அ.தி.மு.க., வழக்குகளை வரிசைப்படி ஞாபகம் வைச்சிருக்கிற அறிவுஜீவிக்கு படம் பிடிக்கும் !