உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: மெட்ராஸ் மேட்னி

வாரிசுகளை கரை சேர்க்க ஓடும் நடுத்தர குடும்பங்களின் இதயத்துடிப்பு!'அறிவியல் புனைவுகளே சாகசம் நிறைந்தவை' என்று நம்பும் எழுத்தாளர் ஜோதி ராமைய்யா, நடுத்தர வர்க்க குடும்பத் தலைவன் கண்ணனின் வாழ்க்கையை கள ஆய்வு செய்து நமக்கு சொல்வதாக திரைக்கதை!'கிடைத்த கொம்பை பிடித்தெழும் அவரைக்கொடி' போல் வாழ்வில் மேலெழும்பி வந்தவன் கண்ணன். காற்றை எதிர்கொள்ளும் உறுதியான மரமாக கண்ணன் இல்லாததில் மகன் தினேஷுக்கு ஏமாற்றம். தன் வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சிய கண்ணனின் இளைப்பாறலுக்கு காரணமாகி நிற்க விரும்புகிறாள் மகள் தீபிகா. இம்மூவரும் கூடு அடையும் மரமாக குடும்ப தலைவி கமலம்! மகள் - மகன் - கணவன் உறவை சமநிலையில் பேண, அவரவர் செவிகளில் நம்பிக்கை வார்த்தைகளை அள்ளித்துாவும் கமலமாக ஷெல்லி கிஷோர்; ஒருவர் தன்னை நிறத்தால் பாகுபடுத்துகையில் சகிப்பு காட்டி, தந்தையை பிறப்பால் இழிவு செய்கையில் வெடிக்கும் மகளாக ரோஷிணி ஹரி பிரியன்; உணர்வுகளைப் பரிமாறத் தடுமாறும் மகனாக விஷ்வா; இம்மூவரும் அமைத்துக் கொடுத்த பாதையில் அரியணை ஏறும் தந்தையாக காளி வெங்கட்! சுவாரஸ்யமான கட்டத்தில் வரும் விளம்பர இடைவேளையாக 'பச்சோந்தி' பிரமா, ரகு, பூமர் அங்கிள் உள்ளிட்ட பாத்திரங்கள். நாயின் இறப்பை வைத்து நிகழும் பஞ்சாயத்து காட்சிகள் நமக்கு 'வாட்ஸ் ஆப்' பார்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கின்றன. 'குடும்ப படம்' என்பதற்காக 'அழுகாச்சி காவியம்' பாடாதது ஆறுதல்.'நடுத்தர வர்க்கங்களில் பல உட்பிரிவுகள் இருப்பதால் கண்ணனின் குடும்பத்தை அனைத்து பார்வையாளர்களும் நடுத்தர வர்க்கமாகவே உணர்வார்கள்' எனும் நம்பிக்கையில் மட்டும் சிறு ஓட்டை! சிறந்த நடிகர்களும், உணர்ச்சிப்பூர்வமான கதையும் கூட்டணி அமைத்திருப்பதால் குறைகள் பெரிதாக தெரியவில்லை.ஆக...உடனடியாக வீட்டுக்கு போன் போட்டு, 'எல்லாரும் நல்லா இருக்கீங்கள்ல...' என்று விசாரிக்கத் துாண்டும் படம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !