உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா: மாமன்

சிறுசிறு நாடகத்தன்மையுடன் ஓர் உணர்வோவியம்! காலையில் கிளம்பி மாலையில் வீடு சேரும் தாயின் கால்களை கட்டியணைத்து கொஞ்சுமில்லையா... அந்த குழந்தையின் மனநிலைக்கு நம்மையும் ஆளாக்கி விடுகிறது முதல் 15 நிமிட திரைக்கதை! 'என் அப்பாவா வாடா...' எனும் அர்த்தத்தில் தன் வளைகாப்பில் தம்பியை ஸ்வாசிகா அழைக்கும் கணத்தில், எழுந்து திரைக்குள் புகுந்து கொள்ளலாம் போல் இருக்கிறது. சூரி... 'என்னமோ... தனியா வாழ்ந்திருவேன்னு சொன்னே...' என்றவாறு க்ளைமாக்ஸில் பார்த்தீர்களே ஒரு பார்வை... சத்தியமாக சூரி, 'என்னவோ என்னை காமெடியன்னு சொன்னீங்க...' என்று கேட்பது போலவே இருந்தது; செம! இப்படியாக க்ளைமாக்ஸில் சூரியை கேட்க வைக்க, ஐஸ்வர்யா லஷ்மியின் திறமையும் அவ்வளவு உழைத்திருக்கிறது. சூரி தாய்மாமன் அவதாரம் எடுத்த அந்த பிரசவ மருத்துவமனையில், தன் காதலை ஐஸ்வர்யா லஷ்மி சூரியிடம் சொல்லும் அழகு... வானவில்லின் சிறு துண்டு! அதீத 'தாய்மாமன் - மாப்பிள்ளை' பாசத்தால் சூரியின் தாம்பத்ய வாழ்வு பாதிக்கப்படும் இந்த நாடக கதையில், 'ராஜ்கிரண் - விஜி சந்திரசேகர்' தம்பதியின் முதுமை காதலை, அல்ல... அல்ல... 'முழுமை' காதலை திரைக்கதை காண்பித்த விதம் மட்டும் 'நாடகம்' எனும் வட்டத்திற்கு அப்பாற்பட்டது! இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இன்னும் தன் திறனில் கூர்மையானால், இன்றைய தலைமுறையின் வாழ்வை தன் படைப்புகள் மூலம் திருத்த முடியும். 'என்னை ஏன்டா கேவலமா பார்க்கலை...' என்ற அக்காவின் கேள்விக்கு பின் ஒளிந்திருக்கும் பாச உணர்வை புரிந்து கொண்டால், இக்காட்சி உட்பட பல காட்சிகள்... தேன்பலா! ஒரு படைப்பு உள்ளம் உலுக்கி உறவுகளின் விரல் கோர்க்கத் துாண்ட வேண்டும்; ஆங்காங்கே நாடகத்தனமெனினும் இந்த மாமன் அதைச் செவ்வனே செய்கிறான். ஆக...'சித்திரை திருவிழா' காண்பது போல் திரையரங்கங்கள் நிரம்பும்; உணர்வுகள் ததும்பி வழியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !