நாங்க என்ன சொல்றோம்னா...: டூரிஸ்ட் பேமிலி
பின்னணியில் 'லா...லா...லா...' மட்டும் மிஸ்ஸிங்!இலங்கையில் இருந்து அத்துமீறி தமிழகம் நுழையும் ஒரு ஈழத்தமிழ் குடும்பம் போலி அடையாளத்துடன் சென்னையில் குடியேறுகிறது. தங்களது பாசமான குணத்தால் குடியிருப்பு வளாகத்தில் அக்கம் பக்கத்தினரின் அன்பை சம்பாதிக்கிறது. அவ்விடம் இவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாகும் நிலையில் நிகழ்வதும் விளைவுகளும்!சமூகத்தில் மனிதர்களிடையே அன்பு பாராட்டுதல் அரிதாகிவிட்டது என்பது இயக்குனர் அபிஷன் ஜீவிந்தின் மனதை உறுத்தியிருக்கிறது; இந்த விஷயத்தை கதைக்குள் பொருத்துவதற்கு பதிலாக இதையே முழு கதையாக வடித்திருக்கிறார்; அது 200 வார்த்தைகளுக்கு மிகாமல் பள்ளி மாணவர்கள் எழுதும் கட்டுரையின் தரத்தில் இருக்கிறது!அறிமுகமில்லா குடும்பத்திற்கு உதவி செய்து மனிதம் போற்றினார் அயோத்தி சசிகுமார். இதில் அன்பும் நேர்மையும் கொண்டு, தனக்கு அறிமுகமில்லாத பலரின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்பட காரணமாக இருக்கிறார்! 'என்ன சிம்ரன் இதெல்லாம்...' என்று 'டெலக்ஸ்' பாண்டியனாக நாம் வருந்தும்படி இல்லை சிம்ரனின் பங்களிப்பு! எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் என மெகா ஹிட்டர்கள் இருந்தும் ஒரு சிக்ஸர் கூட இல்லை!சசிகுமாருக்கும், அவரின் மூத்த மகனுக்குமான விவாத காட்சி மட்டுமே ஒட்டுமொத்த திரைக்கதையில் சற்று ஆழமான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இளைய மகனின் சில குறும்புகள் மட்டும் கரும்பு!நிலவு மீதான கேமரா பார்வையை ஜூம் அவுட் ஆக்கி கதாபாத்திரத்தின் மீது போகஸ் ஆவதாக மாற்றுவது உள்ளிட்ட, 'டிவி' நாடகங்களிலேயே பழசாகிவிட்ட காட்சியமைப்புகள் இதில் உண்டு. இப்படியான புதுமையில்லா ஆக்கத்தால், நல்ல கதையாக மாறியிருக்க வேண்டிய ஒன்று அழுத்தமின்றி கடந்து செல்கிறது.ஆக....'அப்படி ஒரு ஓரமா போய் விளையாடுங்கப்பா...' என்ற அளவில் ஒரு படம்!