நாங்க என்ன சொல்றோம்னா...: ஹோம்பவுண்ட் (ஹிந்தி)
இரு நண்பர்களின் உணர்வுப்பூர்வமான பயணம்'கொரோனா ஊரடங்கில் வேலையிழந்து சூரத்தில் இருந்து 1,200 கி.மீ., பயணித்து சொந்த கிராமத்திற்கு புறப்படுகின்றனர் நண்பர்களான சந்தன் குமார் வால்மீகி மற்றும் முகமது சோயப் அலி' - இது, நெகிழ்ச்சியான இப்பதிவின் இறுதிப்பகுதி; 'ஜாதி மற்றும் மதரீதியிலான தங்களின் அடையாளம் அழிந்து, வகிக்கும் பதவிக்காக சமூகத்தில் மதிக்கப்படுவோம் என்கிற எதிர்பார்ப்பில் இவர்கள் சீருடை பணியாளர் தேர்வை எழுதுகின்றனர்' - இது கதையின் முதல்பகுதி! இவ்விரு பகுதிகளுக்கு இடையில்... சமூகத்தின் ஜாதிய மனோபாவம், வேலைவாய்ப்பின்மை, பாலின பாகுபாடு, வறுமை உள்ளிட்ட கொடுமைகளின் தாக்கத்தோடு நகர்கிறது திரைக்கதை. குருவி தலையில் பனங்காயாக சமூகம் தங்கள் மீது சுமத்தியிருக்கும் பாகுபாடுகளை கடந்து, 'நாமும் உயரப் பறந்துவிட மாட்டோமா' என்கிற சந்தன் மற்றும் முகமதுவின் தவிப்பை கதை முழுக்க உணர முடிகிறது! விண்ணப்ப படிவங்களில் தன் ஜாதி அடையாளத்தை மறைப்பது சந்தனின் வழக்கம். 'என் முழுப்பெயரை சொல்கையில் மற்றவர்கள் என்னை இளக்காரமாக பார்க்கின்றனர்; ஆனால், அப்படி அவர்களிடம் சொல்லாது நான் மறைக்கையில் என்னை நானே இளக்காரமாக பார்க்கிறேன்' எனும் அவனது இப்பொருமலை, வசனத்தோடு நில்லாது காட்சிகள் வழியாகவும் உணர்த்திய இயக்குனர் நீரஜ் காய்வனின் அணுகுமுறை பாராட்டுக்குரியது! 'இந்தியா - பாகிஸ்தான்' கிரிக்கெட் போட்டியின் போது இந்திய முஸ்லிம்கள் தங்களது தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படு வதை, முகமது மற்றும் அவனது அலுவலக சகாக்கள் விவரிக்கும் காட்சி... அதிர்ச்சி! 'கல்விதான் மாற்றத்திற்கான திறவுகோல்' என்பதை சந்தனுக்கு புரிய வைக்க முயற்சித்து தோல்வியுற்றபின், காதலை உதறிச்செல்லும் ஜான்வி கபூரின் சுதா பாரதி பாத்திரம்... கம்பீரம்! பின்னொரு சூழலில், காதலை கைவிட்டதற்காக சந்தனிடம் சுதா மன்னிப்பு கேட்கும்போது, 'உன் சுயத்தை இழந்து என்னை காதலிப்பது சரியாக இருக்காது' எனச் சொல்லும் அவனது தெளிவில், 'சந்தன் மாறி விட்டான்' என்பதை சொல்லாமல் சொல்லும் இயக்கம் அழகு! 'கொரோனா' ஊரடங்கில் வேலையிழந்து, குஜராத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு நடைபயணமாக புறப்பட்ட முகமது சயூப் மற்றும் அம்ரித் குமார் நண்பர்களைப் பற்றி பத்திரிகையாளர் பஷரத் பீர் எழுதிய கட்டுரையை தழுவி எடுக்கப் பட்டிருக்கும் படம்; இரவு நேரத்தில் தேசிய நெடுஞ் சாலையில் சாரை சாரையாக நடந்து செல்லும் தொழிலாளர்களை பிரதிக் ஷாவின் கேமரா காட்சிப்படுத்திய விதம் மனம் கனக்க வைக்கிறது! கதை இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க, 'நண்பர்கள் நலமுடன் வீடு திரும்பி விடுவார்களா' எனும் பதற்றம். தொடரும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளுக்கு இரண்டு புறாக்கள் வந்து முற்றுப்புள்ளி வைக்க, நம் மனம் நிறைத்து நிறைவுறுகிறது கதை; மனதிற்குள் இன்னும் அப்புறாக்கள் சிறகடிக்கும் ஓசை. ஆக...உயிர் மீது பயமும் உறவுகள் மீது பிரியமும் தந்த 'கொரோனா' காலத்திற்குள் மீண்டும் பயணிக்கும் உணர்வு!