நினைவுகளின் நிழல் கண்ணீர் ததும்புகிறது
அது நடந்தது 1985ல்... தற்போதைய சென்னையின் பரபரப்பு இல்லாத காலக்கட்டம். நன்மங்கலத்தில் இருந்து மவுன்ட்ரோட்டில் உள்ள என் அலுவலகத்திற்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். பேருந்தில் தான் செல்வேன். ரோட்டில் இருந்து வீட்டிற்கு, 4 கி.மீ., துாரம் நடக்க வேண்டும். இதில் 2 கி.மீ.,தொலைவுக்கு தெருவிளக்கே இருக்காது. அந்த பாதைக்கு துணையாக என்னுடன் வருபவன், நான் வளர்த்த 'பிரபு' (நாட்டு நாய்) மட்டுமே.அவனோடு இருப்பதால், மற்ற தெருநாய்கள் என்னை பார்த்து குரைக்காது. எனக்கு மட்டுமல்ல என் மகன், மகள், பள்ளிக்கு நடந்து செல்ல வழித்துணையாகவும் பிரபு தான் இருந்தான். மே மாதம் ஒரு நள்ளிரவில் வேலை முடித்து வீடு திரும்பிய போது, துாரத்தில் நின்றிருந்த 'பிரபு', என்னை பார்த்தும் கூட அசையாமல் நின்றிருந்தது. அருகில் நெருங்கிய போது வேகமாக குரைத்தது. கருப்பு நிறத்தில் சுருண்ட நிலையில் பாம்பு கிடந்தது. அதை மிதிக்காமல் இருக்கத்தான் 'குரைத்திருக்கிறான்' என தெரிந்து கொண்டேன்.அந்த பாம்பு வேகமாக சீறியபடியே ஊர்ந்து சென்றது. ஆபத்திலிருந்து என்னை காப்பாற்றிய பிரபு, ஒரு வாரத்திலேயே இறந்தது. அந்த பாம்பு கடியால் தான் அது மரணித்திருக்க வேண்டும். அதன் நன்றியுணர்வை இப்போது நினைத்து பார்த்தாலும் விழிகளில் கண்ணீர் ததும்புகிறது.- வி.ராதாகிருஷ்ணன், செல்லமே வாசகர், சென்னை.