கோடைக்காலத்தில் நாய்களை எப்படி பராமரிப்பது? எந்தெந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்?
- பி.கயல்விழி, கோவை.அதிகப்படியான வெயிலுக்கு செல்லப்பிராணிகள் பாதிக்கப்படும். சுத்தமான தண்ணீர் அவ்வப்போது தர வேண்டும். வாரம் ஒருமுறை குளிப்பாட்டுவது அவசியம். திராட்சை தவிர மற்ற விதையற்ற பழங்கள் சாப்பிட கொடுக்கலாம். ஐஸ்கட்டி, ஐஸ்கிரீம் கொடுக்கக்கூடாது.முடி அதிகம் கொண்ட நாய்களுக்கு, குரூமிங் செய்துவிடலாம். தினசரி காலை, மாலை நேரங்களில், சீவி விடுவது, டவல் கொண்டு துடைப்பது நல்லது. குளிப்பாட்டும் போது சில நேரங்களில், தண்ணீர் காதுக்குள் செல்ல வாய்ப்புள்ளதால், நன்றாக துடைத்துவிட வேண்டும்.இதைச்செய்ய தவறினால், காதுகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவது, சீல் வடிதல் போன்ற அறிகுறிகளோடு, காதுகளை ஆட்டிக்கொண்டே இருக்கும். உடனே கால்நடை மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம். அலட்சியம் காட்டினால், இத்தொற்றுகளால் புழு உருவாகி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.பொதுவாக நாய்களுக்கு மனிதர்களை போல வியர்வை துளைகள் கிடையாது. மூச்சிரைத்து தான் குளிர்ந்த காற்றை உடலுக்குள் செல்ல அனுமதித்து, வெப்பத்தை சமன் செய்து கொள்கிறது. அதிக தாகத்துடன் இருக்கும் போது, பி காம்ப்ளக்ஸ் டானிக், தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், செல்லப்பிராணிகளுக்கு எந்த மருந்துகளும் தனிப்பட்ட முறையில் கொடுக்க கூடாது.- எஸ். திருக்குமரன், துணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, கோவை.