''நம் நாட்டு இன நாய்களின் உடல்திறனை உலகறிய செய்வதே எதிர்கால லட்சியம்,'' என்கிறார், பெங்களூருவை சேர்ந்த, 'டாக் ஷோ' மற்றும் 'பிகேவியர்' பயிற்சியாளர் கிங்சாலமன் டேவிட்.நாய்களை வகைப்படுத்துவதன் நோக்கம்...
நம் தேவைக்காக வளர்க்கப்படும் நாய்களுக்கு, நேர்த்தியான உடலமைப்பு இருந்தால் மட்டுமே, திறனை வெளிப்படுத்த முடியும். இதற்காக, 11 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.முதல் பிரிவில் இடம் பெறும் நாய்கள் பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. இரண்டாம் பிரிவில், 'ஒர்க்கிங்' அதாவது உரிமையாளர் சொல்லும் வேலையை செய்யக்கூடியவை. புல்டாக், புல்மஸ்தீப், டாபர்மேன், ராட்வீலர் போன்றவை இப்பிரிவில் இடம்பெறும். இவற்றை வீடு, தோட்டம் என எந்த வகை பாதுகாப்பிற்கும் பயன்படுத்தலாம்.'ரெட்ரீவர்' வகை நாய்கள், ஹன்டிங் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். அந்தக்காலத்தில், மிருகங்கள், பறவைகளை வேட்டையாட செல்லும் போது, காட்டிற்குள் உரிமையாளருக்கு முன்பே இவ்வகை நாய்கள் சென்று, வேட்டையாட தகுந்த இடத்தை காட்டிக்கொடுக்கும். துப்பாக்கியால் சுட்டு கீழே விழும் பறவைகளை, எடுத்து வந்து கொடுப்பதால் தான், ரெட்ரீவர் என்ற புனைப்பெயரே வந்தது.வீட்டிற்குள் செல்லப்பிராணியாக மட்டுமே வளர்க்க நினைப்போர், 'டாய் ப்ரீட்' தேர்வு செய்யலாம். இப்படி ஒவ்வொரு வகை பிரிவிலும் உள்ள நாய்களை, அதன் தன்மை மாறாமல் பராமரித்தால் தான், அடுத்த தலைமுறையினருக்கு, அவை வேலை செய்யும் தகுதியை பெறும்.நாய்களின் குணாதிசயத்தை மாற்ற முடியுமா?
நிச்சயமாக முடியும். பப்பியாக இருக்கும் போதே, 4-6 வது மாதத்தில் பயிற்சி வழங்குவது அவசியம். எந்த தேவைக்கு நாயை வளர்த்தாலும், உரிமையாளரின் கட்டளைக்கு கீழ்படிவது அவசியம். குழந்தைகளுடன் நட்பாக பழக விடுதல், தேவையில்லாமல் குரைப்பதை தவிர்த்தல், பிறர் மீது தாவாமல் இருப்பதற்கு பயிற்சி வழங்க முடியும்.போதிய பயிற்சி இல்லாமை, முறையாக உணவு வழங்காமல் இருத்தல், வீட்டிற்குள் அடைத்து வைப்பது போன்ற காரணங்களால் மட்டுமே, நாய்கள் அக்ரசிவ் ஆகின்றன. சமீபத்தில், மத்திய அரசு 23 வகை நாய்களை தடை செய்வதாக அறிவித்தது. இதற்கு எதிராக, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இப்பட்டியலில் இடம்பெற்ற நாய்களுக்கு, பயிற்சி அளித்ததன் அடிப்படையில், உண்மை ஆதாரங்களை முன்வைத்ததால், தீர்ப்பு சாதகமானது. இதன்மூலம், 23 வகை நாய்களின் பெடிகிரியை பாதுகாத்த மனநிம்மதிஏற்பட்டது.உங்களை பற்றி...
என் தாத்தா சார்லஸ் புலி பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்பாவுக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். இதனால் தானோ என்னவோ, 18 ஆண்டுகளாக பயிற்சியாளராக தொடர்கிறேன். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சேம்பியன்களை உருவாக்கியிருக்கிறேன். நம் நாட்டு இன நாய்களை வெளிநாடுகளில் நடக்கும் ஷோக்களில் பங்கேற்க வைப்பது ஏற்றுமதி செய்து, உலகளவில் அங்கீகாரம் பெற்று தருவது தான் என் எதிர்கால திட்டம்.