அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தனியாக நிலம் வாங்கி அதில் நம் விருப்பப்படி வீடு கட்டி குடியேற வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், எதார்த்த சூழலில், சென்னை போன்ற நகரங்களில் அனைவருக்கும் இது சாத்தியமாவது கடினமான விஷயமாக உள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் மக்கள் வீடு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தனி வீடுகளை வாங்குவதைவிட அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும்போது அதற்கான ஆவணங்களை சரி பார்ப்பதில் பலரும் விழிப்புடன் செயல்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இன்றைய தேதியில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்ற முன்வந்தாலும், விற்பனை பிரதிநிதிகள் நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக சில வாக்குறுதிகள் அள்ளி விடப்படுகின்றன. உண்மையில் நடைமுறை சாத்தியமா என்பதையும், கட்டுமான நிறுவனம் இதற்கு கட்டுப்படுமா என்பதையும் தெரியாமல் வழங்கப்படும் வாக்குறுதிகள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க முடிவு செய்யும் நிலையில், அந்த நிறுவனத்தின் முந்தைய திட்டங்கள் தொடர்பான விஷயங்களை பாருங்கள், கட்டட விதிமீறல், வீட்டை உரிய காலத்தில் ஒப்படைப்பது போன்ற விஷயங்களில் அதன் செயல்பாடு என்ன என்று பாருங்கள். குறிப்பாக, அந்த குறிப்பிட்ட குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தும் நிலம் தொடர்பான வில்லங்கம் என்ன என்பதில் வீடு வாங்குவோர் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். இதில் நிலத்தின் உரிமையாளருக்கும், கட்டுமான நிறுவனத்துக்கும் இடையிலான நிலை என்ன என்று பாருங்கள், தற்போது அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனைக்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த பின்னணியில், நிலத்தின் மதிப்பு, கட்டட மதிப்பு ஆகியவற்றை சேர்த்து அதன் அடிப்படையில் கூட்டு மதிப்பு கணக்கிடப்பட்டு வீடு விற்பனை பத்திரம் தயாரிக்கப்படுகிறது. இதில் வெளியாட்களுக்கு வீடு விற்பனை செய்யும் போது, நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., கட்டட மதிப்பு சேர்ந்த கூட்டு மதிப்பு கணக்கிடப்பட வேண்டும். நீங்கள் வாங்கும் வீட்டுக்கான கூட்டு மதிப்பு எப்படி கணக்கிடப்பட்டுள்ளது என்பதையும் அதில் சேர்ந்துள்ள விபரங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, உங்கள் வீட்டுக் கான வரையறுக்கப்பட்ட யு.டி.எஸ்., பரப்பளவு என்ன அதற்கு, வழிகாட்டி மதிப்பு என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டும். இத்துடன் அந்த பகுதியில் நிலவும் கட்டுமான பணி மதிப்பு என்ன என்பதையும் நீங்கள் அறிந்தால் தான் உங்களுக்கான கூட்டு மதிப்பு சரியா என்பதை பாருங்கள். இதில் உங்கள் பகுதி மற்றும் கட்டுமான திட்டத்துக்கு நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு அதிகம் என்று நீங்கள் நினைத்தால் அதுகுறித்து பதிவுத்துறையில் மேல் முறையீடு செய்யலாம். இதில் நியாயம் கிடைத்தால் பதிவு செய்யும் மதிப்பு மாறுபட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுநர்கள்.