உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / கட்டுமான ஒப்பந்த தயாரிப்பு, பதிவு பணிகளில் அலட்சியம் வேண்டாம்

கட்டுமான ஒப்பந்த தயாரிப்பு, பதிவு பணிகளில் அலட்சியம் வேண்டாம்

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்க நினைப்போர் அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அப்போது தான், வீடு வாங்குவது தொடர்பான நடைமுறைகளில் எவ்வித ஏமாற்றமும் ஏற்படாமல் தடுக்க முடியும்.சில ஆண்டுகள் முன்பு வரை இது போன்ற திட்டங்களில் பெயரளவுக்கு கட்டுமான ஒப்பந்தங்கள் எழுதப்படுவது வழக்கமாக இருந்தது. இதில் வீடு வாங்குவோரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, கட்டுமான ஒப்பந்தங்களை பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.இதனால், அடுக்குமாடி திட்டங்களில், புதிய வீடு விற்பனை தொடர்பான யு.டி.எஸ்., பத்திரம் பதிவாவதற்கு முன் கட்டுமான ஒப்பந்தம் பதிவாகி இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில் பொது மக்கள் அதை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.கட்டுமான ஒப்பந்த பதிவு இல்லாமல், புதிய வீட்டுக்கான யு.டி.எஸ்., பத்திரத்தை பதிவு செய்ய செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் கட்டுமான ஒப்பந்த வரைவு தயாரிப்பில் வீடு வாங்குவோர் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.குறிப்பாக, கட்டுமான ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டிய விபரங்கள் குறித்து அடிப்படை தெளிவுடன் இதற்கான வரைவு ஆவணத்தை தயாரிக்க வேண்டும். புதிய வீட்டின் மொத்த பரப்பளவு, யு.டி.எஸ்., அளவு, வாகன நிறுத்துமிட அளவு போன்ற விபரங்கள் இருந்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.புதிய வீட்டின் ஒவ்வொரு பாகங்கள், அறைகள் குறித்த பரப்பளவு, உயரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கட்டுமான ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு அறைகளின் பரப்பளவு, அதில் அமையும் வசதிகள் என்ன என்பதை துல்லியமாக குறிப்பிட்டால் தான் அந்த ஒப்பந்தம் உரிய பாதுகாப்பை வழங்கும்.மேலும், புதிய வீட்டை கட்டுவது தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் முழுமையாக கட்டுமான ஒப்பந்தத்தில் இடம் பெறுவது அவசியம். உதாரணமாக, புதிய வீடு கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த விபரங்களை உரிய ஆதாரங்களுடன் கட்டுமான ஒப்பந்தத்தில் தெரிவிக்க வேண்டும்.குறிப்பாக, கான்கிரீட் பயன்படுத்தி தளம், இன்ன அளவில் அமைக்கிறோம் என்பதற்கு பதிலாக, என்ன வகை கான்கிரீட்டை பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை குறிப்பிட வேண்டும். கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கம்பிகள் குறித்த விபரங்களும், சுவர் அமைப்பதில் பயன்படுத்தப் பட்ட செங்கல் குறித்த விபரங்களும் தெளிவாக இருக்க வேண்டும்.இது போன்ற விஷயங்களில் வீடு வாங்குவோர் பொறுமையாகவும், தெளிவாகவும் நடந்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சூரியா
பிப் 10, 2024 17:32

நல்ல அறிவுரைதான். ஆனால் தமிழக அரசு நல்லதை ஏற்காத! அரசின் புதிய அறிவிப்பின்படி, அடி மனைக்கும், கட்டிடத்திற்குள் தனித் தனி ஆவணங்களைப் பதிவு செய்யாமல், ஒரே ஆவணமாக, கூட்டு மதிப்பிற்கு ப் பதிவு செய்ய வேண்டும். அரசாங்கம், வரி/ கட்டணம் வசூலிப்பதுடன் தன் எல்லையை நிறுத்திக் கொண்டு, எந்தவித ஆவணம் தனக்குப் பாதுகாப்பானது என்பதை மக்களின் முடிவிற்கு விடுவது நல்லது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை