உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / நில வரைபடத்தில் துல்லிய தகவல்களை எளிதாக அறிவது எப்படி?

நில வரைபடத்தில் துல்லிய தகவல்களை எளிதாக அறிவது எப்படி?

வீடு, மனை வாங்குவோர், அவற்றுக்கான அனைத்து ஆவணங்களையும் முழுமையாகவும், முறையாகவும் ஆய்வு செய்வது அவசியம். குறிப்பாக, நீங்கள் வாங்கும் நிலத்தின் துல்லிய அளவுகளை அறிய, நில வரைபடத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். ஆனால், எதார்த்த நிலையில் பல இடங்களில் நில வரைபடம் கிடைப்பதற்கே பல்வேறு கட்ட முயற்சிகளில் உரிமையாளர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால், நில வரைபடங்களை எப்படி? எங்கிருந்து பெறுவது என்பது மக்களுக்கு பெரும் போராட்டமாக உள்ளது.இவ்வாறு பெறப்படும் நில வரைபடங்களை பயன்படுத்தும் நிலையில், மக்கள் குறிப்பிட்ட சில அடிப்படை வழிமுறைகளை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, நீங்கள் வாங்கும் நிலத்துக்கான வரைபடத்தை வாங்கி பார்க்கும் போது, முதலில் அதன் அடிப்படை தகவல்களை சரி பாருங்கள். ஒவ்வொரு நில வரைபடத்திலும், தலைப்பு பகுதியில், இடது பக்கத்தில் மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகிய விபரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். நீங்கள் வாங்கும் நிலம் அமைந்துள்ள பகுதி, இந்த விபரங்களுடன் ஒத்து போகிறதா என்பதை முதலில் சரி பார்க்க வேண்டியது அவசியம். இதன் பின், வரைபடத்தின் வலது ஓரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் சர்வே எண் சரியானதா என்பதை ஆய்வு செய்யுங்கள், இதில், நில வரைபடத்தில் பிரதான சர்வே எண் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதா; உட்பிரிவு எண் சேர்க்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பல இடங்களில் பிரதான சர்வே எண் மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தால், அதில் உங்களுக்கான பாகம் எது என்பதை அறிவதில் சிரமம் ஏற்படும். எனவே, உட்பிரிவு செய்யப்பட்ட நிலத்துக்கு, உட்பிரிவு எண்ணுடன் கூடிய நில வரைபடத்தை வாங்கி ஆய்வு செய்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஒரு நிலம் பல்வேறு பாகங்களாக உட்பிரிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான நில வரைபடத்தை கேட்டு பெறும் போது, தாலுகா அலுவலக அதிகாரிகள், பிரதான சர்வே எண்ணுக்கான நில வரைபடத்தின் பிரதியை மட்டும் கொடுப்பதால், உங்கள் நிலத்தின் அளவுகளை துல்லியமாக அறிய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, அந்த வரைபடத்தில் நிலத்தின் அளவுகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். பொதுவாக, வருவாய் துறையின் நடைமுறைகள் அடிப்படையில், நிலத்தின் அளவுகள் ஹெக்டேர், ஏர்ஸ் என்ற அளவுகள் அடிப்படையில் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. இணையதளத்தில் உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றி, ஹெக்டேர், ஏர்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளை சென்ட், சதுர அடியாக மாற்றி உண்மை நிலவரத்தை அறியலாம். இந்த முறையில் நிலத்தின் அளவுகளை துல்லியமாக அறிய, நில வரைபடத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர் நில அளவை துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SUBBU,MADURAI
நவ 09, 2024 15:28

இதை விட எளிதாக அறிய, எ.கா நிலம் யார் பெயரில் இருக்கிறது அதன் சர்வே எண் என்ன அந்த நிலத்துக்கு பட்டா இருக்கிறதா அதை சுற்றியுள்ள நிலங்களின் சர்வே எண் என்ன என்பது போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள My Property என்ற app ஐ டவுன்லோடு செய்து அதில் மேல குறிப்பட்ட விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.


முக்கிய வீடியோ