காலாவதியான கட்டுமான பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இன்றைய சூழலில் புதிதாக வீடு கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை தேர்வு செய்வது, வாங்கு வதில் பொது மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். மற்ற பொருட்களை போன்று இல்லாமல் கட்டுமான பொருட்கள் விஷயத்தில் விலையில் துவங்கி பல்வேறு நிலைகளில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. புதிய வீட்டை கட்டும் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும், கட்டுமான பொருட்களை நாமே வாங்கி கொடுக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். இவ்வாறு நினைப்பதால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. கட்டுமான பணிகளுக்கு செங்கல், மணல், சிமென்ட், ஜல்லி, டி.எம்.டி., கம்பி போன்றவற்றை வாங்குவதில் என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று அலட்சியமாக இருக்காதீர்கள். உதாரணமாக, கட்டுமான பணிக்கு செங்கல் வாங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் சொன்னால், அதில் பல்வேறு விபரங்களை கேட்க வேண்டும். வீடு கட்டும் பணியில் தற்போது என்ன நிலையில், எவ்வளவு செங்கல் தேவைப்படும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப வாங்க வேண்டும். பக்கத்தில் உள்ள டீலர் அல்லது ஹார்டுவேர் கடையில் சொன்னால் போதும் தேவையான செங்கல் வந்துவிடும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், அது தரமான உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ஆர்டர் வந்த பின் தான் தயாரிப்பாளரிடம் இருந்து செங்கல் போன்ற பொருட்களை வாங்குவதை பழக்கமாக வைத்துள்ளன. இவ்வாறு, தயாரிப்பாளரிடம் இருந்து நேரடியாக கொண்டு வந்து கொடுக்கப்படும் செங்கல், போன்ற பொருட்கள் விஷயத்தில் எவ்வித அச்சமும் வேண்டாம். ஆனால், டீலர்கள் முன்கூட்டியே ஐந்து முதல் பத்து லோடு செங்கற்களை வாங்கி வைத்துள்ள நிலையில், அதை வாங்கி பணிகளை மேற்கொள்ளும் போது தரம் குறைய வாய்ப்பு உள்ளது. செங்கல் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். அதிக நாட்கள் வெளியில் அடுக்கி வைக்கப்படும் நிலையில் அதன் சுமை தாங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் சிமென்ட் போன்ற பொருட்கள் பல மாதங்கள் இருப்பு வைக்கப் பட்டு விற்பனை செய்யப் பட்டால் அதன் திறன் குறைய வாய்ப்புள்ளது. இத்துடன் கருங்கல் ஜல்லி போன்ற பொருட்களையும் கிரஷர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சில நாட்களில் பயன்படுத்திவிட வேண்டும். அதிக நாட்கள் வெளியில் கொட்டி வைப்பட்ட ஜல்லியை பயன்படுத்தினால் கட்டுமானத்தின் உறுதி தன்மை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள். கட்டுமான பொருட்கள் கால வரம்பு
மருந்துகள், உணவு பொருட்கள் போன்று சிமென்ட், செங்கல் போன்றவற்றுக்கு காலாவதியாகும் தேதி வெளிப்படையாக அறிவிக்கப்படுவது இல்லை தட்பவெப்பநிலை, ஈரப்பதம், சூரிய ஒளி போன்றவை பொருட்களின் தரத்தை பாதிக்கலாம் சரியான சேமிப்பு, குறிப்பாக சிமெண்ட் போன்ற பொருட்கள் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கப்படுவது அவசியம் சில பொருட்கள் மற்றவற்றை விட வேகமாக சிதைவடையும். எடுத்துக்காட்டாக, மரம் தீ மற்றும் கரையான்களுக்கு பாதிக்கப்படலாம் சிமென்ட் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது