பருப்பு சாப்பிட்டால் 10 ஆண்டுகள் போனஸ்!
உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால், வாழ்நாளை 13 ஆண்டுகள் அதிகரிக்கலாம்.ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கான கால்குலேட்டரை இதற்காக உருவாக்கியுள்ளனர். இது, 'புட் பார் ஹெல்தி லைப் ஸ்டைல் கால்குலேட்டர்' என்ற பெயரில் ஆன்லைனில் கிடைக்கிறது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், இறப்பிற்கான 286 பொதுவான காரணிகள், 369 நோய்கள் மற்றும் காயங்கள், 87 அபாயகரமான காரணிகள், 204 நாடுகளில் இருந்து கண்டறியப்பட்டன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால், ஆண்டுதோறும் 1.1 கோடி மரணங்கள் ஏற்படுகின்றன. 25.5 கோடி மாற்றுத்திறனாளிகளை உருவாக்குகிறது. 20 வயதுள்ள அமெரிக்க பெண், தன்னுடைய தற்போதைய உணவுப் பழக்கமான, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து, பருப்பு வகைகள், முழு தானியங்கள், 'நட்ஸ்' அதிகமாக சாப்பிட்டால், அவரின் சராசரி வாழ்நாளில், 10 ஆண்டுகளை அதிகரிக்கலாம். இதுவே, 60 வயதிற்கு மேல் மாற்றினால், எட்டு ஆண்டுகளும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று - நான்கு ஆண்டுகளும் வாழ்நாளை அதிகரிக்கலாம்.பருப்பு, காய்கறிகள், பழங்கள், நட்ஸ், மீன் போன்றவை ஆயுள் காலத்தை அதிகரிக்க வல்லவை. பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரித்த உணவு, சர்க்கரை கலந்த பானங்களை, எந்த அளவு குறைவாக உபயோகிக்கிறோமோ, அந்த அளவு வாழ்நாளை அதிகரிக்க உகந்தது.- பெர்ஜன் பல்கலைக்கழகம், நார்வே.ஐரோப்பிய நாடு.