ஒரு நாளுக்கு ஒரு டீ ஸ்பூன் அளவே அதிகம் தான் - டைனிங் டேபிளில் உப்பு டப்பா வைக்காதீங்க...! ரத்த கொதிப்பு, கிட்னி, இதய பிரச்னை தேடி வரும்
உணவு வகைகளில், 'டேஸ்ட்' சரியாக இல்லை என்றால், கொஞ்சம் உப்பைக் கொட்டி கலந்து விட்டு, 'இப்ப நல்ல டேஸ்டா இருக்கே...' என, சப்புக் கொட்டி சாப்பிடுவோர், நம்மில் ஏராளம். ஆனால், ஒரு நாளுக்கு, 5 கிராம் உப்பே பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்காவது தெரியுமா?என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுவே உண்மை!உலக சுகாதார நிறுவனம், இப்படித் தான், ஒரு நபருக்கான உப்பின் பயன்பாட்டை அளவிட்டுள்ளது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், 'இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிச்சுட்டு போகணும் பா...' என, வீண் ஜம்பம் பேசுவதே, பல நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது என்கின்றனர், டாக்டர்கள்.அப்படி என்ன தான் பிரச்னை? ஊட்டச் சத்து நிபுணர் மீனாட்சி சொல்றதை கேளுங்க...உலக சுகாதார நிறுவனம், நாள் ஒன்றுக்கு, ஒருவர், 5 கிராம் உப்பு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என, பரிந்துரைத்துள்ளது. நாம் சாப்பிடும் உணவில் இருந்து (சாப்பாடு, பருப்பு, பழம், காய்கறி) ஒரு கிராம் உப்பு நமக்கு கிடைத்து விடும். மீதம், நான்கு கிராம் உப்பை மட்டுமே, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படியானால், ஒரு டீ ஸ்பூனில், முக்கால் டீ ஸ்பூன் உப்பை மட்டுமே, எடுத்துக் கொள்ளலாம். நிறைய பேர், அப்பளம், வற்றல், மோர் மிளகாய், உப்பு பிஸ்கட், உப்பு பிரட் என, பலவாறாக உப்பை சேர்த்துக் கொள்கின்றனர்.பதப்படுத்தப்பட்ட உணவு, குளிர் பானங்கள், சாஸ், ஊட்டச்சத்து பானங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவற்றில் எல்லாம், உப்பு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தாத உணவுகள் சாப்பிடுவதை விட்டு விட்டு, எப்போதும், புதிதாக வந்த காய்கறி, பழங்களை சாப்பிடுவதே நல்லது.அளவான உப்பு பயன்பாடு, ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கலாம். 'இப்படி சொன்னால் வேறு எதைத் தான் சாப்பிடுவது?' என, நீங்கள் கேட்கலாம். எதில் நல்ல கொழுப்பு உள்ளது; கெட்ட கொழுப்பு எதில் உள்ளது என பார்த்து, உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது.நெய், வெண்ணெய், ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு, ஆட்டுக்கால், ஈரல், மூளை, பாயா, கருவாடு, முந்திரி, பிஸ்தாவில் எல்லாம், கெட்ட கொழுப்புகள் உள்ளன; இவற்றை உணவில் சேர்க்க வேண்டாம். ஆடை நீக்கிய பால், வால் நட், பாதாம் பருப்பில் நல்ல கொழுப்புகள் உள்ளன; இவற்றை, மிதமான அளவில் பயன்படுத்தலாம்.அசைவ பிரியர்கள், தோல் நீக்கிய கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக் கரு, மீன் சாப்பிடலாம். பொதுவாக, சோடியம் அளவு, 2.3 கிராம் என்ற அளவில் இருந்தால் போதும்; 5 கிராம் உப்பில், 2.3 கிராம் சோடியம் கிடைத்து விடும்.உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டு. உப்பு அதிகமானால், ரத்த அழுத்தம் கூடும் என்பதை மறந்து விட வேண்டாம். ரத்த அழுத்தம் கூடினால், அடுத்தடுத்து பல பிரச்னைகள் வரும். எலுமிச்சம்பழம், புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால், உப்பின் தேவை குறையும்.கீரை, பருப்பு, சுண்டல், தக்காளி, சாத்துக்குடி, திராட்சை போன்றவற்றில், பொட்டாசியம் உள்ளதால், ரத்த அழுத்தம் குறையும். கிட்னி பாதிப்பு உள்ளோர், பொட்டாசியம் அதிகம் உள்ள இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். மீறினால், இதய பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொதுவாக, தண்ணீர் அதிகம் குடியுங்கள்.இன்னும் சொல்வது என்றால், டைனிங் டேபிளில், உப்பு டப்பாவை வைக்காதீர்கள். அருகிலேயே உப்பு இருப்பதால், இஷ்டம் போல் பயன்படுத்த வேண்டி வரும். அப்புறம், நீங்கள் தான் சிரமப்பட வேண்டும்.இப்படி, நீண்ட விளக்கம் அளிக்கிறார் டாக்டர் மீனாட்சி.