கடுமையான இடுப்பு வலியும், அக்னி கர்ம சிகிச்சையும்!
வளர்மதி, ஒரு நடுத்தர வயதுப் பெண். அவருக்கு பல நாட்களாக, இடுப்பு வலி. 'இடுப்பிலிருந்து ஒரு நரம்பு இழுக்கிற மாதிரி, வலி உள்ளது' எனக் கூறினார்.வலி கடுமையாக இருந்ததால், அவரால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியவில்லை. குனிந்து, வேலை செய்வது கடினமாக இருந்தது. சற்று நேரம் நின்றால், பயங்கர வலி ஏற்படும் நிலை. சிறிது நேரம் உட்காரலாம் என்றாலும், அவரால் முடியவில்லை. வலது கால் மடித்து உட்காரும் போது, கடுமையான வலி இருந்தது. இரவில் தூக்கமே இல்லை. சாதாரணமாக ஏற்படும் முதுகு, இடுப்பு வலிக்கும் இந்த வலிக்கும், ஒரு பெரிய மாறுபாடு இருந்தது. இந்த நோயில், வலி இடுப்பிலிருந்து ஆரம்பித்துக் கால் வழியாகப் பாதம் வரை பரவும்.இவரைப் போல இன்னொருவர் அவர் தச்சர் வேலை செய்பவர். அவருக்கும் வலி, இடுப்பிலிருந்து கால் வரை இழுக்கும். மேலும், காலில் உணர்ச்சி குறைந்து, சிறிது மரத்துப் போகும். இது, வாத நோய்களில் ஒன்று. இதற்கு, 'கிருத்ரசி' என்று பெயர்.கிருத்ரசி நோயை, மஹா வாத நோய் என, அழைப்பர். ஏனெனில், இது மிகவும் தீவிரமாகத் தாக்கி நோயாளியை வலி தாங்க இயலாமல், படுத்த படுக்கையாக்கி விடும்.ஆயுர்வேத சிகிச்சைக்கு வருமுன், அனைவரும், இடுப்புப் பகுதியின், எம்.ஆர்.ஐ., ஸ்கேனுடன் தான் வருவர். அவர்களை இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யுமாறு, டாக்டர் அறிவுறுத்துவர். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்த பின், சில காலம் வலியின்றி இருந்து, மறுபடி வலி தோன்றிய பின், ஆயுர்வேத சிகிச்சையை நாடுவர்.வலி கடுமையாக வந்த தச்சருக்கு, உடனடியாக வலி நிவாரணம் செய்ய, 'அக்னி கர்மம்' என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. வலி இருக்கும் இடத்தில், மருந்து தைலத்தை பயன்படுத்தி, அக்னி கர்ம முறை மேற்கொள்ளப்படும்.அக்னி கர்ம சிகிச்சை முடிந்த, சிறிது நேரத்திலேயே வலி நிவாரணம் ஏற்படும். இதன் பின், மருந்துகளைப் பயன்படுத்தியும், எண்ணெய் குளியல், வஸ்தி போன்ற சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படும்.ஒரு சில நோயாளிகளுக்கு, 'சிராவியதனம்' என்னும் ஒரு சிகிச்சை முறையும் அளிக்கப்படும். கால் மரத்துப்போய் கபத்துடன் இணைந்து வரும் நோயில், கபத்தை குறைக்கும் வாமன சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். இது போன்ற சிகிச்சைகள்மேற்கொள்ளும்போது, வலி நீங்கி, நிம்மதி பெறலாம்.குறிப்பு: வலி ஆரம்பித்த உடனே ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டால், வலி நிவாரணம் பெற்று குணமடைவது மட்டுமின்றி, அனாவசிய மருத்துவ செலவுகளை, தவிர்க்கலாம்.