உள்ளூர் செய்திகள்

நிறம் மாற்றப்படும் உணவால் ஒவ்வாமை

குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவது எதனால்?ஒவ்வாமை என்பது பல வகையில் ஏற்படுகிறது. முக்கியமாக புரதச்சத்து உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். நாம் உண்ணும் உணவுகளில் கலந்திருக்கும் வேதிப்பொருட்களால் ஒவ்வாமை ஏற்படலாம். முக்கியமாக பழைய உணவுகள் மற்றும் நிறத்திற்காகவும், ருசிக்காகவும் உணவுகளில் கலக்கப்படும் வேதிப் பொருட்களால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்படலாம். உணவு ஒவ்வாமையின் அறிகுறி பல வகைகளாக வெளிப்படும். உடலில் அரிப்பு ஏற்படலாம். உடம்பில் தோல் கருப்பு நிறமாக மாறலாம். வாந்தி, வயிற்று போக்கு ஏற்படலாம். தோல், உதடுகள் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படலாம். ஒவ்வாமை அதிகமான அளவில் வரும் போது சுவாசிப்பதில் கஷ்டம் ஏற்படும். சில நேரங்களில் மயக்கம் ஏற்படும். ரத்த அழுத்தம் குறையலாம். சுத்தமான உணவுகள், செயற்கை வேதிப்பொருட்கள் கலக்காத உணவுகளை உண்ணும் போது ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.தின்பண்டங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?தின்பண்டங்களை பொறுத்தவரை அவை எந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன என கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அந்த தின்பண்டங்களில் ருசிக்காக சேர்க்கப்படும் 'அஜினமோட்டோ' போன்ற பொருட்கள் இருக்கிறதா என தெரிந்து கொள்ள வேண்டும். உணவுகளை பதப்படுத்துவதற்காகவும், உணவுகள் ருசியாக இருப்பதற்காகவும், நிறத்திற்காகவும் பல வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அது அளவுக்கு அதிமாகும் போது தீங்கை விளைவிக்கின்றன. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை கொடுக்க வேண்டும். நிறம் மாற்றப்படும் தின்பண்டங்களை கொடுக்கக்கூடாது.பேக்கரி, சாக்லெட் போன்ற தின்பண்டங்கள் ஏற்றதா?உடனுக்குடன் மற்றும் சுகாதாரமான, சுத்தமான உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். நிறம் மாற்றப்பட்ட கூல் டிரிங்ஸ் கொடுக்கக்கூடாது. பொதுவாக அல்வா என்றால் ஒரிஜினல் கோதுமை நிறத்தில் தான் இருக்க வேண்டும். ஜிலேபி சிவப்பு நிறத்தில் இருந்தால் உண்ணக்கூடாது. ஜிலேபி தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் உளுந்து நிறத்தில் இருந்தால் மட்டுமே அது ஆரோக்கியமான உணவு.வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு எது?வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து முக்கியம். புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து உணவுகளை வழங்க வேண்டும். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளான பீட்ஷா பர்க்கர் போன்ற உணவுகளை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு உடல் பயிற்சி மிக அவசியம். உடல் பயிற்சி இல்லாமல் இருந்தால் உடல் பருமனாகி வியாதிகள் வந்து விடும். வளரும் குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவுகளான கேரட் கொடுக்கலாம். இது கண்களுக்கு நல்லது. கீரைகள் கொடுத்தால் ரத்த சோகையை நீக்கும். மேலும் நுண்ணுாட்ட சத்துக்கள் கீரைகளில் அதிகளவு உள்ளது. கலப்படம் இல்லாத, கலருக்காக, கவர்ச்சிக்காக தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடக்கூடாது. கலப்படம் இல்லாத உணவுகளை உண்ண பழகி கொள்ள வேண்டும்.- டாக்டர் ஜெ.சங்குமணி, சர்க்கரை நோய் நிபுணர், மதுரை. sangudr@yahoo.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்