ரிங் வோர்ம் கட்டுப்படுத்த சுலபமான வழி!
தோல், தலையில் தீவிரமாக பரவக்கூடிய பூஞ்சை தொற்றான 'ரிங் வோர்ம்' என்று சொல்லப்படும் படர் தாமரையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக மழை, குளிர் காலங்களில் இதன் பரவல் அதிகமாக இருக்கும்.எங்கள் கிளினிக்கிற்கு குழந்தைகள் உட்பட நிறைய நோயாளிகள் இப்பிரச்னையுடன் வருகின்றனர். பூஞ்சைக்கு எதிரான ஆன்டி பங்கல் கிரீம், பவுடர் உபயோகித்தாலும் பல நேரங்களில் தீர்வு கிடைக்காது. ஐம்பது காசு நாணயம் அளவிற்கு திட்டு திட்டாக உடல் முழுதும் பரவி தீவிர தொற்றைஏற்படுத்தும்.இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. தீவிர தொற்று இருந்தால் பஞ்சகர்மா சிகிச்சையில், வாமனம், விரேச்சனம், ரத்தமோக்ஷனம் போன்ற சிகிச்சை முறைகள் இதற்கு நல்ல தீர்வை தருகின்றன.இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நான் கவனித்த வரையில், குளிர், பனி, மழைக்காலங்களில் போதிய சூரிய ஒளி, காற்றோட்டம் இல்லாத வீடுகளின் சுவர், கதவுகளில் கரும் புள்ளிகள் இருந்தால், பூஞ்சை இருக்கிறது; ஈரப்பதமான சூழலில் வீடு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.இதற்கும், நம் உடலில் ஏற்படும் படர் தாமரைக்கும் நேரடியான தொடர்பு இருப்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும், இவை இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பூஞ்சைகள். அதனால், புறச்சுழலில் இருக்கும் பூஞ்சையின் பாதிப்பு உடலின் உள்ளேயும், வெளியேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.படர் தாமரை பாதிப்பு வராமல் தடுக்க, நோயாளிகளுக்கு சுலபமான தீர்வை சொல்லுவேன்.மழை, குளிர்காலம் முடிந்ததும், சுவர், கதவுகளில் உள்ள ஈரப்பதத்தை போக்க, வேப்பிலை, மஞ்சள், வேதிப்பொருள் சேர்க்காத சாம்பிராணியால் புகை போடலாம். சுவரை சுத்தம் செய்து வெள்ளையடிக்கலாம். பழைய துணிகள், உள்ளாடைகள், திரைச்சீலைகளை அப்புறப்படுத்தி, குப்பையில் போடாமல் எரித்து விட வேண்டும். சூரிய ஒளி, காற்று படும்படி வீட்டின் ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.இவை எல்லாம் பூஞ்சை வளர்வதை தடுக்கும்.இத்துடன் டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளையும், பராமரிப்பு முறைகளையும் மறந்து விடக்கூடாது.டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர்,ஸ்ரீ ஹரியம் ஆயுர்வேதம், சென்னை86101 77899sreehareeyam@gmail.com