'எனக்கு பசியே இல்லை' என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். இந்த பசியற்ற தன்மைக்கு 'அனோரெக்ஸியா நெர்வோசா' என்பது பெயர். உடல், மனம் என இரண்டும் சேர்ந்த பிரச்னை இது. இப்பாதிப்பு உள்ளவர்கள் உடல் எடை தொடர்ந்து குறைந்தாலும், எங்கே அதிகம் சாப்பிட்டால் எடை அதிகரித்து விடுமோ என தேவையற்ற பயத்துடனே இருப்பார்கள். அதனால் சாப்பிடவே அஞ்சுவார்கள். அப்படியே சாப்பிட்டாலும் கணக்கு பார்த்து தான் (இதில் எத்தனை கலோரி) சாப்பிடுவர். தன் உடல் கச்சிதமாக இல்லை என நினைப்பர். இதற்கு உடல் எடையை குறைப்பதே தீர்வு என நினைப்பர். சாப்பிடும் அளவை குறைப்பர். இது மோசமாகி ஒரு கட்டத்தில் தொடர்ந்து பல வேளை சாப்பிடமாட்டார்கள். இதனால் வயதுக்கேற்ற எடையை விட பாதி எடையுடன் இருப்பர். ஆனால் அவர்களோ நாம் இன்னும் அதிக எடையுடன் இருக்கிறோம் என்றே நினைப்பர். இதற்கு காரணம் பாதிக்கப்பட்டவர்களின் கட்டுப்படுத்த முடியாத மன எண்ணம் தான். இரண்டாண்டாக தொடர்ந்து எடை குறைதல், வாந்தி போன்ற பிரச்னையுடன் 25 வயது பெண் பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு 'அனோரெக்ஸியா நெர்வோசா' பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது 5 ஆண்டு கடந்தும் சிகிச்சை தொடர்கிறது.இதுகுறித்து அவரது டாக்டர் மகேஷ் கவுடா கூறுகையில், 'இப்பாதிப்பு உள்ளவர்கள் தன் உடல் அமைப்பை பற்றி எதிர்மறை எண்ணம், குறைந்த தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பர். இப்பாதிப்பு இருபாலருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக 30 - 40 வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மனைவியின் உடல் எடையை பற்றி கணவர் தொடர்ந்து விமர்சித்ததால், எடையை குறைக்க வேண்டும் என எண்ணி சாப்பிடுவதையே குறைத்து, மனதளவில் பாதித்து இப்பிரச்னைக்கு ஒரு பெண் உள்ளாகி இருக்கிறார். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு மாதவிடாய் பிரச்னை, குறைந்த ரத்த அழுத்தம், அமர்வது, குனிவதில் பிரச்னை, முடி உதிர்தல், மயக்கம் வருவது போன்ற உணர்வு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். சாதாரணமாக மனித வயிறு 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஆனால் இவர்களுக்கு 500 மி.லிட்டராக இருக்கும். வயிறு சுருங்கும் போது அவர்களால் அதிகமாக சாப்பிடமுடியாது' என்றார்.
எடை குறைப்பு கவலை
டில்லி மனநலம், நடத்தை அறிவியல் துறை இயக்குனர் டாக்டர் சமீர் பரிஹ் கூறுகையில், '35 கிலோ எடையுள்ள 17 வயது பெண் சிகிச்சைக்கு வந்திருந்தார். எடையை பற்றிய கவலை, சாப்பிட விருப்பமின்மை, மருத்துவ, உடல் ரீதியாக நலமாக இல்லை, எனர்ஜி குறைந்தவராக இருந்தார். அந்த வயதுக்கு ஏற்ற எடையை விட 80 சதவீத எடை குறைவாக இருந்தும், அவர் எடையை குறைக்க வேண்டும் என்ற கவலையிலேயே இருந்தார். இவர்கள் ஒருவேளை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அதை குறைக்க வேண்டும் என அதீத உடற்பயிற்சியில் ஈடுபவர். இவர்கள் தனியாக சாப்பிடுதல், சாப்பிட அதிக நேரம் எடுத்தல், மிகக்குறைந்தளவு உணவு எடுப்பர். மன அழுத்தம், உறக்கமின்மை பிரச்னை, ஊட்டச்சத்து, வைட்டமின் குறைபாடுடன் இருப்பர்' என்றார்.
மனநல மருத்துவர் கூறுவது என்ன
டில்லியை சேர்ந்த மனநல மருத்துவர் சஞ்சய் சுக் கூறுகையில், 'சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2500 கலோரி தேவைப்படும். ஆனால் என்னிடம் சிகிச்சைக்கு வந்த 20 வயது பெண், ஒருநாளைக்கு 700 - 800 கலோரி மட்டுமே சாப்பிடுவார். உடல் பருமனமாக இருப்பதாகவும், சாப்பிட கட்டாயப்படுத்துவர் என பயந்து குடும்பத்தினர், நண்பர்களுடன் வெளியில் செல்ல மாட்டார். தீவிர மன அழுத்தத்துடன் இருந்தார். அவருக்கு மருந்துகளுடன் மனரீதியான சிகிச்சை அளித்தோம். அவரைப்பற்றிய எதிர்மறை எண்ணத்தை போக்க கவுன்சிலிங், தியானம் மேற்கொள்ளுதல் வழங்கப்பட்டது. இவை அவரது உணர்வுகளை கட்டுப்படுத்த உதவியது. இவர்களுக்கு குடும்ப ஆதரவு மிக முக்கியம்' என்றார்.
உணவியல் நிபுணர் சொல்வது என்ன
பெங்களூருவை சேர்ந்த டயட்டீசியன் (உணவியல் நிபுணர்) பிரியம்வத சந்திரமவுலி கூறியதாவது: இப்பாதிப்பு உள்ளவர்கள் சில சமயத்தில் ஆரோக்கியமானவராக இருந்திருக்கலாம். ஆனால் இவர்களது தோற்றம், சாப்பிடும் அளவு பற்றி குடும்பத்தினர், சக நண்பர்களின் தொடர்ச்சியான விமர்சனத்தால், மன அழுத்தத்துக்கு உள்ளாகி சாப்பிடுவதற்கே பயப்படும் அளவுக்கு மாறி விடுவர். தனது உடல் ஒல்லியாக இருப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பதால், இரும்புச்சத்து, கால்சியம், புரத சத்துகள் இவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது.இவர்களது நிலை பற்றி பெற்றோர்கள் கூட அறிந்திருக்காததால், மருத்துவமனையில் நோயாளியின் பசியற்ற தன்மை அளவை மதிப்பீடு செய்து, முழுமையான அணுகுமுறையுடன் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். நோயாளிகள் தங்கள் பிரச்னைகளை மறைக்கவே அதிகம் விரும்புகின்றனர். இதனால் இதற்கு முதல்படி, பாதிப்பு உள்ளவர்களுக்கு குடும்பத்தினர் அனைத்து நிலையிலும் ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அதிலிருந்து விரைவில் விடுபடமுடியும்' என்றார்.மேலும் அறிய Priyaviva5@gmail.comல் தொடர்பு கொள்ளலாம்.