எந்த குழந்தையும் நல்லவன் ஆவதும்... - தீயவன் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே!
''ஏண்டா கவின் என்னாச்சு... எதுக்குடா வீட்டை விட்டு வெளியே போனே.. நாங்க உன்னை தேடாத இடமில்லை... எப்படியெல்லாம் பதறி போனோம். உனக்கு என்ன குறை வெச்சோம்.. சொல்லுடா...!'' என, அப்பா தியாகராஜனும், அம்மா புவனேஸ்வரியும் கதற.. அவர்களை முறைத்தபடியே அமர்ந்து இருந்தான் கவின்.கோவை நகரில் உள்ள புகழ் பெற்ற பள்ளியில், கவின் படித்து வந்தான். விளையாட்டு, படிப்பு எதிலும் முதல் மாணவனாக கவின் வர வேண்டும் என, பெற்றோர் விரும்பினர்.தேவையான அனைத்து வசதிகளும், செய்து கொடுத்தனர். ஒரு நாள் திடீரென, கவின் காணாமல் போனான். இரண்டு நாட்களுக்கு பிறகு, கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில், கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவனை கண்டுபிடித்து, அழைத்து வந்தனர்.காரணம் கேட்டதற்கு, 'கால்பந்து விளையாட போனேன்' என்று மட்டும், பதில் சொன்னான். இது போல, பல முறை நடந்தது. ஒவ்வொரு முறையும், விளையாட சென்றேன் என்று மட்டும் பதில் அளித்தான்.கவினை பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற பெற்றோர், இறுதியாக, கோவை 'இன்சைட் கிளினிக்' குழந்தைகள் சிறப்பு மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இங்குள்ள டாக்டர் சவுமியா பாஸ்கரன், குழந்தைகளுக்கான சிறப்பு மனநல மருத்துவத்தில் டி.எம்., பட்டம் பெற்றவர். தமிழகத்தில் டி.எம்., பட்டம் பெற்ற இருவரில், இவரும் ஒருவர்.பெற்றோரை வெளியே அமர சொல்லி விட்டு, கவினிடம் பேச்சுக் கொடுத்தார் டாக்டர் சவுமியா.''எங்க அப்பா எந்த வேலைக்கும் நிரந்தரமா போனதில்லை. வீட்டுல அப்பாம்மா ரெண்டு பேரும் எப்பவும், சண்டை போட்டுட்டேதான் இருப்பாங்க. இதனால புக்ஸ் படிக்கறது, 'டிவி' பார்க்கறதுன்னு இருந்துருவேன்.எப்பவும் என் கருத்துக்கு எதிராதான், அப்பா பேசுவார். 'பிளஸ் 2 முடிச்சவுடனே, இன்ஜினியரிங் படி' ன்னு சொன்னாரு அப்பா. ஆனா, நான், 'டாக்டருக்கு படிப்பேன்'ன்னு சொன்னேன். அதுக்கு அவரு, 'உன்னால முடியாது. இன்ஜினியரிங் சீட் வாங்கித் தரேன்'ன்னு சொன்னாரு.என்னால், ஏன் டாக்டருக்கு படிக்க முடியாதுங்கற நினைப்பு வந்துச்சு. அப்பாவோட எண்ணத்தை முறியடிக்க, எப்படியும் டாக்டருக்கு படிக்கணும்னு வெறி வந்துச்சு. ஆனா, பாடங்களை பலமுறை படிச்சும், என்னால 'நம்பர் ஒன்' ங்கற நிலைக்கு வர முடியலை.சரி, தெருவோர குழந்தைங்க வாழ்க்கையில என்ன கஷ்டப்படுறாங்கன்னு பார்த்தால், அதனால ஏற்படுற 'இன்ஸ்பிரேஷன்', நல்லா படிக்க துாண்டுகோலா இருக்கும்னு முடிவெடுத்து, அது மாதிரி இடங்களுக்கு போகத் துவங்கினேன்...,'' என்று, தான் வீட்டை விட்டு, அடிக்கடி வெளியேறியதற்கான காரணத்தை, தயங்கி தயங்கி கூறினான் கவின்.இதன் பின், கவினுக்கு ஏற்பட்ட 'டிப்ரஷன்' பிரச்னைக்கு, தகுந்த சிகிச்சை அளித்து குணப்படுத்தினார் டாக்டர்.டாக்டர் சவுமியா கூறுகையில், ''கவினிடம், மனதுக்கும், நடத்தைக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்தேன். நுாறு மார்க் கண்டிப்பாக வாங்கி விட வேண்டும். 99 எடுத்தால் கூட பயன் இல்லை என்று கவின் மனதில் இருந்த எண்ணத்தையும், நிதர்சனமான வாழ்க்கை முறை குறித்தும் விளக்கினேன். மதிப்பெண் மட்டும் வாழ்க்கை அல்ல என்பதை விளக்கி, சிந்தனை உணர்ச்சி சார்ந்த உளவியல் சிகிச்சை (CONGNITIVE BEHAVIOUR THERAPY) அளித்தேன். வீட்டில் சண்டை சச்சரவு இன்றி இருப்பது குறித்து, பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். ஐந்து மாத தொடர் சிகிச்சைக்குப் பின், இப்போது கவின் ஆல்ரைட்,'' என்றார். பெற்றோர்களே கவனம்''ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதைவிட, அந்த பிரச்னை எங்கிருந்து துவங்குகிறது என, பெற்றோர் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இக்கால குழந்தைகளின் மனநிலை வேறு. அதை பெற்றோர், கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கருத்துக்களை, குழந்தைகளின் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகள், குறிப்பாக, டீன் ஏஜ் வயதினர் செய்த தவறுகளை மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டி காயப்படுத்தக்கூடாது,''''அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என, பெற்றோர் கற்றுக் கொள்வது அவசியம். குழந்தைகளின் நோக்கம் என்ன என்பதை அறிந்து, அதை ஊக்கப்படுத்த வேண்டும். நன்றாக படிக்கும் பிற மாணவ, மாணவியருடன் ஒப்பிடக்கூடாது. மனநல மருத்துவர்களிடம், குழந்தைகளை அழைத்து செல்லும்போது, அதற்கான காரணத்தை முன்பே எளிமையாக விளக்கி விட வேண்டும்,'' என்கிறார் டாக்டர் சவுமியா. இதுதான் அறிகுறிகள்இது போன்ற குழந்தைகளுக்கு, எதிலும் ஆர்வம் இருக்காது. சில நேரங்களில் நண்பர்களுடன் பேசுவார்கள். சில நேரம் பேச மாட்டார்கள். இன்டர்நெட், மொபைல் கேம்ஸ், 'டிவி' ஆகியவற்றின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். துாக்கம் வராது. சரியான நேரத்தில் துாங்கி, சரியான நேரத்தில் எழுந்திருக்க மாட்டார்கள். உணவை சிலர் அதிகமாகவும், குறைவாகவும் உண்பர். சில நேரம், என்ன வாழ்க்கை இது என்ற ரீதியில், விரக்தியான மனநிலையில் இருப்பர்.டாக்டர் சவுமியா பாஸ்கரன்குழந்தைகள் சிறப்பு மனநல மருத்துவர்,இன்சைட் கிளினிக்,86789 34050