பூண்டு விழுதில் காற்று படும்போது கிடைக்கும் பலன்!
இரண்டு பல் பூண்டை தோல் உரித்து, விழுதாக்கி, தனியாக எடுத்து, 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். விழுதை மூடி வைக்கக் கூடாது; காற்று படும்படி திறந்தே இருக்க வேண்டும். பூண்டை அரைத்த, உரித்த, நறுக்கியவுடன் சமைக்கக் கூடாது. காரணம், அதில் உள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலில் சேராது; காற்று படும்படி வைக்கும் போது, அதில் உள்ள 'அலினேஸ்' என்ற என்சைம் வெளியேறி, முழுமையான பலன் தரக்கூடிய 'அலிசின்' என்ற வேதிப்பொருள் உருவாகும். பூண்டு நீரை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குடித்தால், ரத்தத்தை சுத்தம் செய்யும்; நச்சுப் பொருளை வெளியேற்றும; எல்.டி.எல்., எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். இயற்கையான முறையில் குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். உடல் எடை ஆரோக்கியமாக குறையும். இதயம், நுரையீரலை வலுப்படுத்தும். காசநோயாளிகள் தினமும் பூண்டு நீர் குடிக்கலாம். எல்லாவிதமான நோய் தொற்றையும் நீக்கும் தன்மையும் இதற்கு உண்டு.பூண்டை அதிக நேரம் சமைப்பது தவறு. அரைத்த விழுதை ஒரு டம்ளர் நீரில் ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பாக காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதிக அமிலம், வாயு தொல்லை இருந்தால், உணவுக்கு பின், ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம். டாக்டர் ஆர்.மைதிலி,ஆயுர்வேத மருத்துவர், சென்னை.