உள்ளூர் செய்திகள்

பருக்களை விரட்ட சிறந்த வழிகள்

இன்றைய சூழலில் பெண்கள் சந்திக்கும் பல பிரச்னைகளில் முகப்பருக்கள், வடுக்கள், வெண்ணிற மற்றும் கருப்பு மூட்டுகள், முகச்சுருக்கம், கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் ஆகியவை முக்கியமானவை. முக சருமத்திலுள்ள அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்றாகச் சேர்ந்து, சருமத்தில் உள்ள துவாரங்களின் மூலமாக உள்ளே சென்று, அங்குள்ள நுண்கிருமிகளுடன் சேரும்போது, இதுபோன்ற பிரச்னை உண்டாகிறது. இதனை தடுக்க அடிக்கடி குளிர்ந்த நீரால், முகத்தை கழுவி சருமத்தின் துவாரங்கள் அடைபடாமல், பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்புள்ள ஆகாரங்களை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாதவாறு, உணவில் பச்சை காய்கறிகள், கீரைகள், பழம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் முகப்பருக்கள், கருப்பு மற்றும் வெண்ணிற மூட்டுக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வயதாகும்போது ஏற்படும் முகச்சுருக்கம் ஒருபுறம் இருந்தாலும், அதிகப்படியான அழகூட்டும் சாதனங்கள் உபயோகிப்பதாலும் வெயில், குளிர் போன்ற சீதோஷ்ண நிலை மற்றும் மன இறுக்கம், மனச் சோர்வு போன்றவை, முகச்சுருக்கத்தை ஏற்படுத்தி அழகை கெடுத்து விடும். சில தசைப்பயிற்சிகளாலும், மசாஜ் போன்றவற்றாலும் முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம். கண்களுக்கு கீழே ஏற்படும் கரு வளையம், முக அழகை கெடுப்பதுடன், வயதையும் கூட்டி காண்பிக்கும். தூக்கமின்மை, கண்களில் ஓய்வின்மை, மனக்கவலை, உடல் சத்துக்குறைவு போன்ற பல காரணங்களை கூறினாலும், கண்களை சுற்றியுள்ள தோலில் ஏற்படும் சுருக்கம்தான், கருவளையத்துக்கு பிரதான காரணம். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதை தவிர்த்து, கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுத்தும், மசாஜ் செய்தும் இக்குறையை நிவர்த்தி செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !