உள்ளூர் செய்திகள்

கேன்சர் அபாயத்தை உருவாக்கும் ரத்த சம்பந்தம்!

எங்கள் மருத்துவமனையைச் சுற்றியுள்ள புதுச்சேரி, மகாபலிபுரம், காரைக்கால், கல்பாக்கத்தில் இரைப்பை கேன்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.செரிமான மண்டலத்தில் கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, கணையம், உணவுக் குழாய், சிறு குடல், பெருங்குடல், மலக்குடல் என்று பல உறுப்புகள் உள்ளன. இவற்றில் தனித்தனியாக வெவ்வேறு வகையான கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இரைப்பை கேன்சர் பாதிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், முதல் வகை ரத்த உறவுகளுக்குள் அதாவது அம்மா, அவரது குழந்தை, இவர்களில் ஒருவருக்கு, இரண்டாம் தர ரத்த உறவுகளில் தாத்தா, பாட்டி, அம்மா உடன்பிறந்தவர்கள், அப்பா உடன்பிறந்தவர்களில் இருவருக்கு மார்பக கேன்சர் கட்டி, பெருங்குடல் கேன்சர், இரைப்பை கேன்சர் இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் இரைப்பையில் கேன்சர் கட்டி வரும் வாய்ப்பு உள்ளது.கட்டி வளரும் போது, இரைப்பையில் இருந்து உணவு வெளியேறும் குழாய் அடைத்துக் கொள்ளும். இதனால், சாப்பிடும் உணவு திரும்ப திரும்ப வாந்தியாக வெளிவரும். தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு மேல் வாந்தி இருந்தால், கறுப்பாக மலம் கழித்தால், அது கேன்சர் அறிகுறியாக இருக்கலாம். கட்டி வளர வளர, அதிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படும். இதனால் தான் முதியவர்களுக்கு ரத்த சோகை இருந்தால், வயிற்றில் கட்டி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். கட்டி, இரைப்பையை தாண்டி வெளியில் பரவினால், எந்த உறுப்பில் பரவியுள்ளதோ, அதற்கேற்ப அறிகுறிகள் இருக்கும். நுரையீரலிலும், வயிற்றின் பிற பகுதியிலும் பரவினால் நீர் சேரலாம். கல்லீரலில் பரவினால், மஞ்சள் காமாலை, 'எண்டோஸ்கோபி' பரிசோதனை செய்தாலே, எதனால் பிரச்னை என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.இரைப்பையில் பலவிதமான கட்டிகள் வரும் வாய்ப்பு உள்ளது. இதில், மூன்று வகை தான் நம் ஊரில் பொதுவானவை. 95 சதவீதம் மிக விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் பரவும் தன்மை உள்ள, 'அடினோ கார்சினோமா' வகையைச் சார்ந்தது. இரண்டாவது வகை, 'கேஸ்ட்ரோ இன்டஸ்டைனல் ஸ்ட்ரோமல் டியூமர்!' இது பரவும் தன்மை குறைவு; அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் போதும். பின்னாளில் திரும்ப வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.வயிற்றில் இருக்கும் ரத்த அணுக்களில் இருந்து உருவாகும், 'லிம்போமா' கட்டி மூன்றாவது வகையைச் சேர்ந்தது. 'பயாப்சி' எனப்படும் இரைப்பையில் இருந்து சிறிதளவு சதையை எடுத்து, என்ன வகையான கட்டி உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை தர வேண்டியிருக்கும். இதன் பின், 'சி.டி., ஸ்கேன்' பரிசோதனை செய்து, கட்டி இரைப்பையில் மட்டும் தான் உள்ளதா, வேறு பகுதியில் பரவி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஆரம்ப நிலையிலேயே கட்டியை கண்டுபிடித்தால், அறுவை சிகிச்சை தேவையில்லை. எண்டோஸ்கோபி பரிசோதனையிலேயே சிகிச்சை செய்து விடலாம். நம் ஊரில் இது போல ஆரம்ப நிலையில் வருபவர்கள், 100ல் ஒருவர் கூட கிடையாது. ஐம்பது வயதிற்கு மேல் தான் இரைப்பை கேன்சர் வரும் வாய்ப்புகள் உள்ளது என்றாலும், 19 வயது பையனுக்கு இரண்டாவது நிலையில் இரைப்பை கேன்சர் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையான, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நடத்தையில் ஒழுங்குமுறையை பின்பற்றினால், எந்த வயதிலும் ஆரோக்கியமாக வாழலாம். டாக்டர் கவுதம்,ஜீரண மண்டல மருத்துவ ஆலோசகர், புதுச்சேரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !