குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: நான் ரொம்ப, ஸ்வீட்
நான் குழந்தையாக இருந்தபோது, மிகவும் குண்டாக இருப்பேன். எண்பதுகளின் ஆரம்பத்தில், நான் பிறந்தபோது, உடல் பருமன் என்ற பிரச்னையே தெரியாது; எந்த கவலையும் இல்லாமல், விரும்பியதை எல்லாம் சாப்பிட்டேன். அந்த வயதில், என் எடை, 86 கிலோ. விளைவு, டீன் - ஏஜில் தெரிந்தது. அதிக உடல் பருமனால், நீரிழிவு பிரச்னை ஏற்பட்டது. அந்நாளிலிலிருந்து, என் வாழ்க்கை மாறி விட்டது. தினமும், 'இன்சுலின்' போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம். இந்த நிலையில், சினிமா வாய்ப்பு வந்தது.அதன்பின் தான், என் தோற்றம் மற்றும் ஆரோக்கியம் பற்றி யோசிக்கத் துவங்கினேன். முதலில், என் உடல் எடையில், 35 கிலோ குறைக்க வேண்டும். ஜிம், நீச்சல், டான்ஸ், யோகா மற்றும் தியானம், என, முழு அர்ப்பணிப்புடன் இருந்தேன். அதிக நார்ச்சத்து, குறைந்த கார்போ ஹைட்ரேட், நல்ல கொழுப்பை அதிகரிக்க, உலர் நட்ஸ், அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், சிறுதானிய உணவுகள், சிக்கன், மீன் என, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்வு செய்தேன்; இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, சாப்பிட பழகினேன். 57 கிலோ எடையுடன், என் நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளது. இனிப்பு சாப்பிட வேண்டும் என விரும்பினால், சிறிய துண்டு, 'டார்க் சாக்லேட்' சாப்பிடுவேன்.