இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்!
மார்பக புற்றுநோய் சமீப ஆண்டுகளில் அதிகரித்து உள்ளதா?ஐரோப்பா, அமெரிக்காவில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். எட்டில், ஒரு பெண்ணுக்கு, இந்த பிரச்னை இருக்கிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் இல்லை என்றாலும், இதுவரை முதல் இடத்தில் இருந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பின்னுக்குத் தள்ளி, மார்பக புற்றுநோய் முதலிடத்திற்கு வந்துள்ளது. நம்மிடம், சரியான புள்ளி விபரங்கள இல்லை. ஆனாலும், எண்ணிக்கை அதிகரித்து இருப்பது உண்மை.காரணிகள் எவை?மார்பக புற்றுநோய் வர பல காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது, வாழ்க்கை முறை மாற்றம். ஐரோப்பாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை ஆய்வு செய்ததில், இரண்டாம் தலைமுறையினருக்கு, ஐரோப்பியர்கள் அளவிற்கு, மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. மேற்கத்திய வாழ்க்கை முறை, உணவு, பழக்க வழக்கங்களை அதிகமாக பின்பற்ற துவங்கியதால், பாதிப்பு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.மரபியல் காரணி பாதிப்பிற்கு காரணமா?மரபியல் காரணங்களால், 90 சதவீதம் மார்பக புற்றுநோய் வருவதில்லை. வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் காரணம் வருகிறது. மது பழக்கம், உடல் பருமன், அதிக கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியின்மை, தாய்ப்பால் கொடுக்காதது, 12 வயதிற்கு முன் பருவமடைவது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது போன்ற சில காரணிகள் உள்ளன. இவையெல்லாம் நம்மால் மாற்றக் கூடியவை தான். இந்தியாவில், சென்னை, திருவனந்தபுரம், டில்லி ஆகிய மூன்று நகரங்களில், இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.தடுக்க என்ன செய்யலாம்?புற்றுநோய் என்பது, செல்கள் கடடுப்பாடு இல்லாமல் வளர்வது தான். புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் பல காரணிகள், நம் கைகளிலேயே உள்ளன. 25 - 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். குழந்தை பெற்றதும், மார்பகத்தில் உள்ள பால் சுரப்பிகளில் மாற்றம் ஏற்படும். அதுவரையிலும், முழுமையடையாமல் இருந்த செல்கள், பால் சுரக்கத் துவங்கியதும், முழு வளர்ச்சி அடையும். 25 வயதிற்கு முன், குழந்தை பெற்றால், செல்களில் மாற்றமும், விரைவில் ஏற்படும். இதுவும் புற்றுநோய்க்கு ஒரு காரணியாக இருக்கலாம். குறைந்த பட்சம், இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று.வரும் முன் காக்க செய்ய வேண்டியது என்ன?சுய பரிசோதனை செய்து கொள்வதே, பாதுகாப்பான முதல் படி. 35 வயதிற்கு மேல், ஒவ்வொரு மாதமும், இதைச் செய்ய வேண்டும். சிறிய மாற்றம் தெரிந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. 40 வயதிற்கு மேல், மேமோகிராம் பரிசோதனை செய்து, மார்பகத்தின் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய தனிப்பட்ட ஆலோசனை, எந்த பிரச்னையும் இல்லாவிட்டாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மேமோகிராம் செய்து கொள்வது பாதுகாப்பானது.மார்பகத்தில், கட்டி ஏதேனும் இருப்பதை உணர்ந்தால், தாமதிக்கவே கூடாது. சிறியதாக இருக்கும் போதே, புற்றுநோய் கட்டியா, சாதாரண கட்டியா என்பதை, பரிசோதித்து தெரிந்து கொள்வது நல்லது. பல நேரங்களில், சிறிய கட்டியும், முற்றிய புற்றுநோய் கட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளது. சிகிச்சை முறையில், பல நவீன மாற்றங்கள் வந்து விட்டன.கீமோதெரபியால் வரும் பக்க விளைவுகளை தவிர்க்க, அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது. கீமோதெரபியின் பக்க விளைவுகளை தவிர்க்க, சில மருந்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டரின் ஆலோசனை இல்லாமல், இதை பயன்படுத்தவே கூடாது.டாக்டர் ராஜேஷ் பாலசுப்ரமணியன்கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணர்,அப்பல்லோ கேன்சர் சிறப்பு மருத்துவமனை,சென்னை. 044 - 61151111 / 1108