வெந்நீரில் குளித்தால் மூட்டுவலி குணமாகுமா?
என் வயது 52. நடக்கும்போது வலது முழங்கால் மூட்டில் வலி உள்ளது. மருந்து எடுத்தும் குணமாகவில்லை. குளிர்ந்த நீரில் குளிப்பதால் வலி குணமாகவில்லை. வெந்நீரில் குளிக்கும்படி, என் நண்பர் கூறுவது சரியா?தண்ணீரின் வெப்ப நிலைக்கும், மூட்டு நோய்க்கும் தொடர்பு இல்லை. சில நேரங்களில் நீச்சல் குளத்தில் சற்று வெப்பமாக உள்ள நீரில் நீந்தும்போது, தற்காலிகமாக வலி குறைவதைப் போல உணர முடியும். பொதுவாக குளிப்பதால் கிடைக்கும் ஒரு புத்துணர்ச்சி, மனதை திடப்படுத்துவதால் வலி குறைவதைப் போல உணருகிறீர்கள்.குளிர்ந்த நீரோ, வெந்நீரோ அடிப்படை நோயை மாற்றாது என்பதால், உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதைச் செய்யவும்.என் 21 வயது மகள், ஸ்கிப்பிங் செய்வதில் ஆர்வமுள்ளவர். ஒரு மாதத்திற்கு முன், ஸ்கிப்பிங் செய்கையில், மூட்டில் லேசாக சுழற்சி ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ., எடுத்ததில், 'லேட்டரல் மெனிஸ்கஸ் டீயர் வித் சிஸ்ட்' என உள்ளது. இதற்கு சிகிச்சை உண்டா?லேட்டரல் மெனிஸ்கஸ் என்பது, மூட்டில் உள்ள ஒரு குருத்தெலும்பு. அது கிழிந்து இருப்பதாகவும், அதற்கு அருகில் ஒரு நீர்க்கட்டி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கிழிந்த 'லேட்டரல் மெனிஸ்கஸ்' பகுதியைச் சீரமைத்து, நீர்க்கட்டியை அகற்றினால் மூட்டுவலி நீங்கும். விளையாட்டுகளிலும் பங்கு கொள்ளலாம். இந்த சிகிச்சையை, தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தில், 'ஆர்த்ரோஸ்கோபி' மூலம் செய்யலாம்.என் தந்தை வயது, 68. இடுப்பு மூட்டு முறிந்தபின், சிறுநீரகம் பாதித்தது. சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு, இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்ய இயலாதா?சிறுநீரகம் கோளாறு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்பது தவறான கருத்து. சிறுநீரக நோய் நிபுணர் அறிவுரைப்படி, 'டயாலிசிஸ்' மேற்கொண்டு, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீர்செய்ய முடியும். அவ்வாறு செய்து ரத்தத்தில் உள்ள 'யூரியாவை' குறைத்து, அறுவை சிகிச்சை செய்யலாம்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன், மதுரை.