கணுக்கால் பாதிப்பிற்கு சர்க்கரை நோய் காரணமா?
எழுபது வயதான எனக்கு, 30 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சில நாட்களுக்கு முன், என் கணுக்காலின் வடிவம் சீர்குலைந்து இருந்தது. கணுக்கால் எலும்பு முறிந்துள்ளது, என்கிறார் டாக்டர். எனக்கு காலில் அடிபட்டதாக நினைவில்லை. நான் என்ன செய்வது?சர்க்கரை நோய் நீண்ட காலம் இருப்பதால், டயாபட்டிக் நியூரோபதி வரலாம். நியூரோபதி உள்ளவர்களுக்கு வலி உணர முடியாது. ஆதலால் எலும்பு முறிந்தும் வலி இருக்காது. எலும்பின் தன்மையும் மோசமாக இருக்கும். ஆதலால் எலும்பு எளிதில் முறியலாம். அதேபோல முறிந்த எலும்பு இணைவது கடினமாகும். அறுவை சிகிச்சை முறையிலே முறிந்த எலும்பை, நவீன முறையில் உள்ள பிளேட் வைத்து சேர்த்தால் இணையும் வாய்ப்பு உள்ளது.என் வயது 66. பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். தோள்பட்டை தசை நாரில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அது கிழிந்துள்ளதால், ஆறு மாதமாக வலி உள்ளது. பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு மூட்டு நுண்துளை நோய் சாத்தியமா?பார்க்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு, மற்ற இயல்பான நபர்களைவிட, சற்று அதிகமாக தோள்பட்டை பிரச்னை காணப்படுகிறது. இந்நோய் உள்ளவர்களுக்கும் தோள்பட்டை பிரச்னையை மூட்டு நுண்துளை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். ஆனால், பார்க்கின்சன் நோயை, ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தபின் செய்வது நல்லது.டாக்டர் கே.என்.சுப்ரமணியன், மதுரை.