"தோள்பட்டையை தானாக உயர்த்த முடியலையே?
என் வயது, 25. கால்பந்து விளையாட்டின்போது, ஆறு மாதங்களுக்கு முன், முழங்கால் மூட்டில் அடிபட்டது. மூட்டின் மேற்பரப்பு ஜவ்வில், காயம்பட்டு உள்ளதாகக் கூறி, பிசியோதெரபி செய்ய, டாக்டர் பரிந்துரைத்து உள்ளார். தற்போது மூட்டை மடக்கும் போது வலி, ஓசை உண்டாகிறது. இதற்கு தீர்வு உண்டா?மூட்டின் மேற்பரப்பில் உள்ள ஜவ்வான, 'கார்டிலேஜ்'க்கு இயல்பாக மறுவளர்ச்சி அடையும் தன்மை கிடையாது. இவ்வாறு ஏற்படும் காயங்கள், மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கும். சமீப காலத்தில் ஜவ்வை மறுவளர்ச்சி செய்ய வைக்கும், ஓட்ஸ், 'மைக்ரோ பிராக்சர்' மற்றும் ஏ.சி.ஐ., சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சில சிகிச்சைகள், நுண்துளை மூலமாகவும் செய்ய இயலும். இச்சிகிச்சை முறைகள், 65 முதல், 70 சதவீதம் வெற்றி பெறும். உங்களுக்கு, இளம் வயது என்பதால், கண்டிப்பாக இந்த சிகிச்சையை செய்து கொள்வது நல்லது.சர்க்கரை நோய் உள்ள எனக்கு, எட்டு மாதங்களாக தோள்பட்டையில் வலி இருந்தது. சமீபத்தில் நடந்த சிறு விபத்துக்குப் பின், இந்த தோள்பட்டையை தானாக உயர்த்த முடியவில்லை. மறு கையின் உதவியுடன் உயர்த்துகிறேன். பிசியோதெரபி செய்தும் பலனில்லையே?நீங்கள் கீழே விழுந்து தோள்பட்டையை உயர்த்த முடியவில்லை என்றால், உங்கள் தோள்மூட்டை சூழ்ந்து உள்ள சுற்றுப்பட்டை தசை கிழிந்து இருக்கலாம். சுற்றுப்பட்டை தசையின் செயல்பாடே, தோள்மூட்டை மேலே உயர்த்துவது தான். நீங்கள் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய் தால், இதை உறுதிப்படுத்த முடியும். சுற்றுப்பட்டை தசையில் கிழிசல் ஏற்பட்டு இருந்தால், நுண்துளை சிகிச்சையில் சீரமைக்கலாம். வெகு விரைவில், தோள்பட்டையை உயர்த்த முடியும்.ஓராண்டாக முழங்கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறேன். மூட்டு மாற்று சிகிச்சை செய்யும்படி டாக்டர் கூறுகிறார். என் வயது, 61. நான் என்ன செய்வது?மூட்டு மாற்று சிகிச்சை, அதன் நன்மை, தீமையை ஆராய்ச்சி செய்து, 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. உலகில் ஆண்டுதோறும், சராசரியாக, ஆறு லட்சம் பேர் பயனடைகின்றனர். இதில், 70 சதவீதம் பேர் அறுபது வயதை தாண்டியவர்கள். இவர்களில், 95 சதவீதத்தினர் மகிழ்ச்சியாக உள்ளனர். மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படும் சகநோயாளிகளுக்கு ஊக்கம் அளிக்கின்றனர். மூட்டுமாற்று சிகிச்சையில் தனிப்பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்களால், ஆபரேஷன் செய்யும் போது, வெற்றிகரமாக அமையும். பயத்தால் நீங்கள் சரியான சிகிச்சை செய்யா விட்டால், உங்களை ஏமாற்றிக் கொள்வது போலாகும்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 98941 03259