முழங்கால் வலியால் உட்கார முடியவில்லையா?
எனக்கு முழங்கால் வலி உள்ளதால், படியேறவோ, தரையில் அமரவோ இயலவில்லை. 2 ஆண்டுக்கு முன், காலில் டிபியா என்னும் எலும்பு முறிந்து, நாட்டு வைத்திய முறையில் சரியானது. அடிபட்ட காலில் வலி இல்லை. நான் என்ன செய்வது?உங்கள் கால் எலும்பு முறிந்து தவறாக இணைந்திருந்தால், உங்கள் காலின் வடிவம் சீராக இல்லாமல் இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு, முழங்கால் மூட்டினில் இயல்பிற்கு அதிகமான விசைகள் செல்வதால், மூட்டினில் தேய்மானம் வேகமாக ஏற்படும். நீங்கள் கூறும் அறிகுறிகள், மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப கட்டம் ஆகும்.நீங்கள், எலும்பு மூட்டு மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்யவும். சில நேரங்களில், வடிவம் குறைந்த காலை முதலில் சரிசெய்ய வேண்டி இருக்கலாம்.எனது வயது 38. கால் சுண்டுவிரலில் முள்குத்தியதில் கிருமி தொற்றி வீக்கமடைந்தது. இப்போது அது எலும்பிற்குள் பரவிவிட்டதாக டாக்டர் கூறுகிறார். ரத்தப் பரிசோதனையில் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?முள்குத்தினால், அது கிருமிகளின் வீரியம் மற்றும் நம் எதிர்ப்பு சக்தியை பொறுத்து நோய் பரவும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும். ஆதலால், எளிதாக கிருமிகள் பரவலாம்.நீங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, 'செப்டிக்' ஆன, முள் குத்திய இடத்தில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்ற வேண்டும். சிலநேரங்களில் நோய் பரவாமல் தடுக்க, சுண்டுவிரலில் ஒரு பகுதியை எடுக்க வேண்டி வரலாம். உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன், மதுரை.