உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் ரத்தத்தில் சுகர் அதிகரிக்கும் மர்மம்: அவசர ஆய்வுக்கு நிபுணர் வலியுறுத்தல்

கோவை: ''கொரோனாவுக்கு பிறகு டைப் 1 சர்க்கரை நோயால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. என்னிடம் சர்க்கரை நோய்க்கு வைத்தியம் பார்க்கும் குழந்தைகள் மட்டுமே, 500 பேருக்கும் மேல் உள்ளனர்,'' என அதிர்ச்சி தகவலை சொல்கிறார் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.

கொரோனாவுக்கு பிறகு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து விட்டது உண்மையா?

உண்மைதான். ஏற்கனவே சர்க்கரை உள்ளவர்களுக்கும், சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்து உள்ளது.

இந்த அளவு அதிகரிக்க என்ன காரணம் ?

கொரோனா நோய் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அச்சம் ஒரு காரணம். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் உடலில் உள்ள ஹார்மோன் அளவு அதிகரித்து, வேறு பல நோய்கள் வர காரணமாகி உள்ளது. இதனால் மனதளவிலும், உடலளவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் அதிகம் பாதித்துள்ளனர். இவர்கள் முறையாக மாத்திரைகள், ஊசி எடுத்து கொள்ளவில்லை. உணவு பழக்கமும் மாறி உள்ளது. கொரோனா தடுப்புக்காக எடுத்து கொண்ட மருந்து, மாத்திரைகள் கணையத்தை பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தைகளை இது எந்த வகையில் பாதித்துள்ளது?

கடந்த மூன்று ஆண்டுகளுக்குள், டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். முன்பெல்லாம் இந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகரித்துள்ளனர்.என்னிடம் வைத்தியம் பார்க்கும் குழந்தைகள் மட்டுமே, 500 பேருக்கும் மேல் உள்ளனர். அப்படி என்றால் கோவையில், தமிழகத்தில் மற்றும் இந்திய அளவில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அரசு உடனே கவனித்து, தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

முன்பு இல்லாத அளவுக்கு, இப்போது அதிகரிக்க என்ன காரணம் ?

குழந்தைகளை பொறுத்தவரை டைப் 1 சர்க்கரை அம்மா, அப்பாவிடம் இருந்து வருவதில்லை. உணவு காரணமாக இருக்கவும் வாய்ப்பில்லை. இது மரபணு மாற்றம் காரணமாகதான் வருகிறது. ஒரு வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் சீரியசாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு தினமும் நான்கு வேளை வாழ்நாள் முழுவதும், இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை உள்ளது.ஒருவேளை ஊசி போடவில்லை என்றால் கூட, டயாபடிக் கோமாவுக்கு போகும் நிலை உள்ளது. போன வாரம் மூன்று குழந்தைகள், கோமா நிலைக்கு போய் விட்டனர். இவர்கள் எல்லாம் , நான்கு, ஐந்து வயது குழந்தைகள்.திருப்பூர், சேலம் பகுதியில் இந்த நோயால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது இவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், ஏதோ ஒன்று நம்மை சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது. இதை ஆய்வு செய்தால் மட்டுமே அறிய முடியும்.

என்ன காரணமாக இருக்கும், உங்கள் யூகம் என்ன?

சரக்கரை நோய் என்பது பழைய நோய். காலங்காலமாக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களுக்கு மட்டும் வரும் ஒரு நோயாகதான் இது இருந்தது. கடந்த, 50 ஆண்டுகளாக குழந்தைகள் சர்க்கரையால் பாதிக்கப்படவில்லை.என் தந்தை, குழந்தைகள் சிறப்பு மருத்துவர். அவர் அனுபவத்தில் ஒரு குழந்தை கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்படவில்லை என்கிறார். இந்த, 10 ஆண்டுகளாகதான் குழந்தைகளை சர்க்கரை நோய் தாக்குகிறது. இப்போது நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.நாம் சாப்பிடும் உணவு மற்றும் தண்ணீரில், விஷத்தன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். இதுகுறித்து, நாங்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்.

இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ?

அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டு, காரணத்தை கண்டறிய வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு போகும் குழந்தை சர்க்கரை நோயாளிகளுக்கு, பாட்டிலில் இன்சுலின் மருந்து கொடுக்கின்றனர். அது பிரிஜில் வைத்தால்தான், கெட்டுப் போகாமல் இருக்கும்.பலரது வீட்டில் பிரிஜ் இல்லை. மருந்து கெட்டு வீரியம் அற்றதாகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு கோமாவுக்கு போவது அதிகமாகிறது. ஏழைக்குழந்தைகளுக்கு அரசு பிரிஜ் வாங்கி கொடுக்கலாம்.இதை செய்தால், 90 சதவிதம் அட்மிட் ஆகாமல் தடுக்கலாம். இப்போது இன்சுலின் போட இன்ஸ்டன்ட் பம்பு என்ற சாதனம் வந்துள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அந்த பம்பை வாங்கி கொடுக்கலாம்.நாங்கள் தனியார் அறக்கட்டளை மூலம், 150 குழந்தைகளுக்கு இந்த சாதனத்தை இலவசமாக கொடுத்து இருக்கிறோம். குழந்தைகளின் சர்க்கரை அளவை, கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், 20 வயதுக்குள் கிட்னி செயல் இழந்து விடும். ஆகவே விரைந்து செயல்பட வேண்டும்.டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர், கே.எம்.சி.ஹெச்.,மொபைல் என்: 85264 21150.snehasswaminathan@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !