கொரோனாவை எதிர்க்கும் டி செல்கள்!
வழக்கமான வைரஸ் தொற்றால் ஜலதோஷம் ஏற்பட்டவர்கள், கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் மிகக் குறைவாகவே இருப்பதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இதற்கு முன் வெளியான ஆய்வில், ஜலதோஷத்தை எதிர்த்து போராடும், 'டி' செல்கள், கொரோனா வைரசால் துாண்டப்பட்டு, சளியுடன் சேர்த்து கொரோனா பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.ஆனால், தற்போதைய ஆய்வின்படி, சளியை உண்டாக்கும் வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்பணுக்கள், கொரோனா வைரசிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், 'ஒமைக்ரான்' உட்பட அனைத்து வகை கொரோனா வைரசுக்கும் எதிராக, இரண்டாம் தலைமுறை தடுப்பூசி தயாரிக்க வழிகாட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.'டி' செல்கள், கொரோனா வைரசின் வெளியில் நீட்டியிருக்கும் கூர்முனை புரதத்தை செயலிழக்கச் செய்வதை விட, வைரசின் உள்ளிருக்கும் புரதத்தை வலுவிழக்கச் செய்கிறது. இந்த அடிப்படையில் எதிர்காலத்தில் தடுப்பூசி தயாரித்தால், வைரசில் ஏற்படும் மரபணு மாற்றத்தையும் தடுக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், லண்டன் இம்பீரியல் கல்லுாரியில் துவக்கப்பட்ட ஆய்வு, தற்போது வெளியாகி உள்ளது.- நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்