ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு
எனக்கு நன்கு அறிமுகமான நண்பர்களின், காமெடி மருத்துவ கதை இது. ஆடம் மற்றும் எஸ்தர், இருவரும் நண்பர்கள்தான் என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் மாதிரி எப்போதும் சண்டை போட்டுக் கொள்வர். இருவரையும் பார்க்கும் போது, 'டாம் அண்டு ஜெர்ரி' கதை நினைவுக்கு வரும். ஒரு கட்டத்தில், இந்த செல்லச் சண்டைகளே, நண்பர்கள் இருவரையும் வாழ்க்கையில் ஒன்றாக இணைத்தது. திருமணம் ஆனதும், முதலிரவு அறையில் சாப்பிட வைத்த அத்தனை இனிப்புகளையும், ஆடம் சாப்பிட்டுவிட்டு வலியால் துடித்தார். காரணம் பல் வலி. ஆடமிற்கு கடைவாய் பற்கள் பாதிக்கு, பாதி சொத்தையானவை. இனிப்புகளின் மேல் அவர் கொண்ட ஆசையால், முதலிரவின் துவக்கத்திலேயே சண்டை ஆரம்பமானது. 'ஏன் இத்தனை சொத்தை பற்கள் இருப்பதை, என்னிடம் மறைத்தாய்?' இது எஸ்தர்.ஆடமோ,' நீ கேட்கவில்லை; அதனால் நானும் சொல்லவில்லை' என்றார். எஸ்தர், ஆடமின் சொத்தை பற்கள் பாதிப்பை, புற்றுநோய் பாதிப்பு போல கருதி, அவரது அன்றாட வாழ்க்கையில் புழக்கத்தில் இருந்த பொருட்களான பிரஷ், சோப், துண்டு, தட்டு போன்றவற்றை தனிமைப்படுத்தினார். ஆடமின், 'ஈகோ' இதனால் தூண்டி விடப்பட்டு, பல் சொத்தைக்கு தீர்வுகாண என்னிடம் வந்தார். காரணம், ஆடம் என்ற அவரின் பெயர், பிரியமானவர்களுக்கு, 'சொத்தை பல்லன்' என்றாகி விட்டது. 'ஸ்டெப்போகாக்கஸ்' மற்றும், 'லக்டோபஸிலர்ஸ்' ஆகிய இரண்டு பாக்டீரியாக்களும், பொதுவாக மனிதர்களிடம் காணப்படும். 'ஸ்டெப்போகாக்கஸ்' கிருமி, தன் எண்ணிக்கையை பெருக்கும் போது, அமிலத்தை வெளியேற்றுவதால், அவை தங்கியுள்ள பற்கள் அரிக்கப்பட்டு சொத்தையாகின்றன. பற்களில் ஒட்டக் கூடிய இனிப்பு, பிஸ்கெட், சாக்லெட், ஐஸ்கீரிம், கேக் போன்றவற்றிலுள்ள, சர்க்கரைப் பொருட்கள், பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும் போது, பாக்டீரியாக்கள் வினைபுரிந்து, 'லேக்டிக்' அமிலத்தை சுரந்து, 'எனாமலை' அரித்து சிதைக்கின்றன; அதனால் பல் சொத்தை ஏற்படுகிறது.பல் சொத்தையை கவனிக்காமல் விட்டால், 'எனாமல்' அடுத்துள்ள 'டென்டின்' பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பல்லில் குழி விழும்; கறுப்பு புள்ளி தெரியும்; வலி அல்லது கூச்சம் ஏற்படும்.பல் சொத்தையின் ஆரம்ப அறிகுறி பற்கூச்சம். பல் சொத்தை, எந்த அளவில் பரவியுள்ளது என்பதை, 'எக்ஸ் - ரே' மூலம் அறிந்து, 'எனாமல்' மற்றும் 'டென்டின்' வரை, சொத்தை இருந்தால், 'பில்லிங்' எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. பற்கூழ் வரை சொத்தை பரவியிருந்தால், வேர் சிகிச்சை எனப்படும், 'ரூட்கெனால்' செய்ய வேண்டும்.ஆடமிற்கு ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப்பட்டது. மூன்று சொத்தை பற்களை எடுத்துவிட்டு, செயற்கை பற்களை வைத்தாகிவிட்டது. இனி பிரச்னை இல்லை. ஆனாலும், ஆடமின் மனைவி மற்றும் பெற்றோர் இன்னமும் ஆடமை, 'சொத்தை பல்லன்' என்றே அழைக்கின்றனர், பாசத்தோடு.- எஸ்.ராகவேந்திரா ஜெயேஷ், பல் நோய் நிபுணர், சென்னை. 94980 22215