டாக்டரின் டைரிகுறிப்பு
மார்ச் 25, 2016: ஷீலாவிற்கு திருமணமானது முதல், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து கனவுகாண ஆரம்பித்தார். கனவு நனவாக இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. மருத்துவ ஆலோசனைக்காக சென்ற போது, ஷீலாவிற்கு கர்ப்ப கால நீரிழிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக இருந்ததால், இன்சுலின் கொடுத்து கட்டுப்படுத்தப்பட்டது.எட்டு மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டு, அழகான மலர்செண்டு போல, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் குழந்தையின் எடை, 3.5 கிலோவாக இருந்தது. இது சராசரியான எடையை விட அதிகம். அதுமட்டுமில்லாமல் குழந்தைக்கு மூச்சுத்திணறலும் இருந்தது. அதனால் பிராணவாயு கொடுக்கப்பட்டதோடு, ஒரு நாள் முழுவதும் செயற்கை சுவாசக் கருவியில் குழந்தை இருக்க வேண்டி வந்தது. பின் நெஞ்சக கதிர்வீச்சு பரிசோதனை செய்தோம்; அதில், குழந்தையின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருந்தது.அதற்காக, 'சர்பக்டன்ட்' எனும் மருந்து கொடுக்கப்பட்டது. அதன் பின் செயற்கை சுவாசக் கருவியை அகற்றியதோடு, பிராணவாயு மட்டும் அளிக்கப்பட்டது. மூன்றாவது நாள் பிராணவாயு நிறுத்தப்பட்டு, ஷீலாவிடம் குழந்தையை கொடுத்தோம். தாய்ப்பாலை குழந்தை குடிக்க ஆரம்பித்தது.கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், சர்க்கரையின் அளவு சீராக இல்லையென்றால், கருவிலுள்ள குழந்தையின் நுரையீரல் முழுவளர்ச்சியடையாது; அதிக எடையுள்ள குழந்தை பிறக்கும். அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். இதோடு கால்சியம் மற்றும் மெக்னீஷியம் சத்துக்கள் குறையும் என்பதால், வலிப்பு ஏற்படுவதோடு குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்படும். ஷீலா இன்சுலின் எடுத்தும், குழந்தைக்கு இப்பாதிப்பு வரக்காரணம். ஷீலா இன்சுலின் எடுத்தும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாததே. கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், நீரிழிவு வந்தால் மேற்சொன்ன பிரச்னைகள் ஏற்படும். இதுவே கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்தில் நீரிழிவு ஏற்பட்டால், குழந்தையின் மூளை, இதயம் போன்ற உறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பிறவிக் குறைபாடுகள் ஏற்படும். மேலும் கரு தனிச்சையாக கலைந்துவிட வாய்ப்பு உள்ளது. கருத்தரித்து முதல் ஆலோசனைக்காக மருத்துவரிடம் செல்லும் போதே, நீரிழிவிற்கான பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முதல் மூன்று மாதத்தில்தான், பல முக்கிய உடல் உறுப்புகள் குழந்தைக்கு வளர ஆரம்பிக்கும். ஆரம்பத்திலேயே பிரச்னைகளை கண்டறிந்தால், பிறவிக் கோளாறுகள் மற்றும் பிறந்தவுடன் ஏற்படும் பிரச்னைகளையும் தீர்க்கலாம். இந்நேரத்தில் ஷீலாவை நினைவு கொள்ள காரணம் ஏப்., 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, நீரிழிவிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.வி.பிரகாஷ்பச்சிளம் குழந்தை பராமரிப்பு நிபுணர்.க்ளவுட் நைன் மருத்துவமனை, சென்னை. 99688 57025