டாக்டரின் டைரிகுறிப்பு
டிச., 15, 2016: ராஜேஷ் மாநகரப் பேருந்து ஒன்றில் கண்டக்டராக பணிபுரிகிறார். தந்தை இறப்புக்குப் பின், அவரது வேலை ராஜேஷுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் படிப்பு முடித்ததும், இந்த வேலையில் சேர்ந்திருக்கிறார். 20 ஆண்டுகளாக, இதே வேலையில் தான் இருக்கிறார். நின்றபடியே செய்யும் வேலை என்பதால், அவருக்கு காலில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று, வலது காலை ஊன்றி நிற்க முடியவில்லை; காலில் திராட்சை கொத்து போல், நரம்பு முடிச்சுகள் காணப்பட்டன. எனவே என்னை சந்திக்க வந்திருந்தார். சில பரிசோதனைகள் செய்த பின், பிரச்னையை கண்டறிந்து விட்டோம். ராஜேஷுக்கு இருப்பது, 'வெரிகோஸ் வெயின்!' காலிலுள்ள நரம்புகள் புடைப்படைவதே, 'வெரிகோஸ் வெயின்' எனச் சொல்லப்படுகிறது. இப்பிரச்னை வந்தால், காலில் அரிப்பு, கால் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கணுக்காலின் உள் பகுதியில் புண் ஏற்படும். அந்தப் பகுதி, கறுப்பாக மாறிவிடும். இதைக் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் எளிது. 'ஆரம்பநிலை என்றால், மருந்து, மாத்திரை, 'ஸ்டாக்கிங்' என்ற சாக்ஸ் அணிவதன் மூலம் குணப்படுத்த முடியும். சில ஆண்டுகளுக்கு முன் வரை, வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு, திறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, 'ரேடியோ ப்ரீக்வென்சி அப்லேஷன், லேசர்' என, நவீன சிகிச்சைகள் வந்து விட்டன.உடலின் மிக நீளமான ரத்தக்குழாய், இது தொடையின் ஆரம்பத்திலிருந்து பாதம் வரை அமைந்துள்ளது. சிறிய குழாய் மூட்டில் துவங்கிப் பாதம் வரை அமைந்துள்ளது. இந்த குழாயில் ரத்தம் தேங்கி பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்ய ரேடியோ ப்ரீக்வென்சி அப்லேஷன் சிகிச்சை முக்கியமாகப் பயன்படுகிறது. இந்த முறையில் அல்ட்ரா சவுண்ட் உதவியுடன், கதீட்டர் எனும் மெல்லிய கம்பி, ரத்தக் குழாய் உள்ளே செலுத்தப்படுகிறது. இதன் மூலமாக, 7 செ.மீ., அளவு உள்ள ரேடியோ ப்ரீக்வென்சி குழாய் உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த அலைகள், வீங்கித் தளர்ச்சி அடைந்த நரம்பைச் சுருக்கிவிடுகிறது. அறுவை சிகிச்சைகள் இல்லாமல் செய்யும் இம்முறையில் பக்க விளைவுகள் குறைவு. வெரிகோஸ் வெயின் பாதிப்பு பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன் சீரற்ற நிலையிலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்ற பெண்களுக்கும் ஏற்படுகிறது. இதோடு ஆசிரியர், சாலை பாதுகாப்பு, காவல் துறை போன்ற பணியில் இருப்பவர்கள், கண்டக்டர், விளம்பரப் பிரிவில் இருப்பவர்கள், கடைகளில் நிறைய நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், காலில் ரத்தக் கட்டு இருப்பவர்கள் போன்றோருக்கு, ரத்த நாளங்களிலுள்ள வால்வுகள் பாதிப்படைந்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படுகிறது. ராஜேஷுக்கு மேலே கூறப்பட்டது போல், ரேடியோ ப்ரீக்வென்சி அப்லேஷன் சிகிச்சையின் மூலம், அவரின் பிரச்னை சரி செய்யப்பட்டது. ஸ்க்லீரோ தெரபி என்று மற்றொரு சிகிச்சையும் உண்டு. இதில், பாதிக்கப்பட்ட நரம்பில் ஒரு வகையான ரசாயனத்தை செலுத்துவதால் எதிர்வினையாற்றி பாதிக்கப்பட்ட நரம்புகள் சுருங்கி விடுகின்றன. ராஜேஷுக்கு சிகிச்சை முடிந்தது. இனி அவர் நிம்மதியாக வேலை பார்க்கலாம்.தி.தீபாஸ்ரீஇன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட்,சென்னை.99401 80710