உள்ளூர் செய்திகள்

வயிற்றின் நண்பன் யார் தெரியுமா?

மழைக்காலம் வருவதால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவது மிகவும் பொதுவானவை. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஒரே நேரத்தில் நோய்வாய் படுவதற்கு, வானிலையில் சிறிய மாற்றம் போதுமானது. விஞ்ஞானம் பல நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், குணப்படுத்துவதற்கும் போதுமான அளவு வளர்ந்திருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவ கால நோய் தொற்றுகளிலிருந்து தடுக்கவும், நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. மஞ்சள், மிளகு, சீரகம் போன்றவை, நம் உடலில் பல அதிசயங்களை செய்கின்றன; இவற்றில் உள்ள 'ஆன்டி ஆக்சிடென்ட்' கிருமி நாசினியாகவும், நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.சுத்தமான தேனில் இயற்கையாகவே 70 வகையான 'விட்டமின்'கள் மற்றும் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால், தேன் பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என்று அழைக்கப்படுகிறது.இந்த உணவுகள் தேனுடன் இணைந்தால், அதன் நன்மைகள் இரட்டிப்பாகும்...!

மஞ்சள் - தேன் கலவை

இந்தக் கலவையில், குறிப்பிட்ட அளவு பாலிபினால், விட்டமின், தாதுக்கள் உள்ளன. இதில் உள்ள 'விட்டமின் - சி, இ' தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிக்கிறது. செரிமான சக்தியை மேம்படுத்தும். இளமையிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் கூறுகளை அழிக்க உதவுகின்றன. மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை கட்டுப்படுத்துவதால் முடக்குவாதம், கீல்வாதம், மூட்டுவலி போன்றவற்றிற்கு நல்லது.* எலுமிச்சை சாறுடன் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருகினால் அலர்ஜி, சளி, காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு சிறந்த நிவாரணமாக அமையும்.

இளநீர் - தேன் கலவை

இந்த கலவையில் நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலை தடுக்கும். சிறுநீரகக் கற்கள், சர்க்கரை கோளாறு, தோல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. தினமும் காலை உணவுக்கு முன், இந்தக் கலவையை அருந்தலாம்.

தேன் கலந்த சீரக நீர்

வெறுமனே கொதிக்க வைத்த நீரில் சீரகம் சேர்த்து, ஆற வைத்து குடிப்பதை விட, அதில் தேன் கலந்து குடித்தால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். செரிமான பிரச்னைகள் வராது. இரும்பு, தாது சத்துக்களின் அளவை ரத்தத்தில் சீராக பராமரிக்க உதவும். சுவாசக் குழாய் பிரச்னைக்கும் தீர்வாக அமையும்.இதில் உள்ள 'ஆன்டி கார்சினோஜன்' கேன்சர் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.

தேனில் ஊறிய 'நட்ஸ்'

தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், அவசியமான எண்ணெய் சத்து, விட்டமின்கள் நிறைந்தது நட்ஸ். கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தன்மையும் உண்டு. ஒரு கைப்பிடி அளவு முந்திரி, உலர் திராட்சை, பாதாம், வால்நட், பிஸ்தா என்று விரும்பிய நட்ஸ் கலவையை தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். இது நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

பழச்சாறுடன் தேன்

பழச்சாறு தயாரிக்கும் போது, சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்துப் பழகினால், பழம், தேன் இரண்டின் பலன்களும் முழுமையாக நமக்கு கிடைக்கும்.இது தவிர, சமைத்த மீனுடன் தேன், உப்பு, மிளகு, கடுகுத் துாள் கலந்து சாப்பிடலாம். இரைப்பை அழற்சி, வயிறு, சிறுகுடல் அல்சர் போன்ற இரைப்பை தொடர்பான பிரச்னைகளை தேன் குணப்படுத்தும். வாந்தி, குமட்டல், சளி, தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு, வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். தேனில் ஊறிய நெல்லிக்காய், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும். எலுமிச்சை டீயில் தேன் கலந்து குடித்தால், நச்சுக்களை நீக்குதோடு, புத்துணர்வு தரும்.

தேன் பயன்படுத்துவதற்கு முன்...

சிறந்தது என்பதற்காக தேவைக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. பித்தப் பை பிரச்னைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், பிளட் தின்னர் மாத்திரை சாப்பிடுபவர்கள், இதயக் கோளாறு உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனை பெற்று சாப்பிடவும். கொதிக்கும் பால், நீருடன் தேன் கலந்தால், அதன் இயற்கைத் தன்மை மாறிவிடும்; சூடான உணவில் தேனை கலக்கக் கூடாது.டி. மயூரி,உணவியல் நிபுணர், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !