டாக்டரின் டைரி குறிப்பு ஜனவரி, 20, 2016
திவ்யாவுக்கு திருமண வயதை எட்டியவுடன், அவளது பெற்றோரான ரகு, உமா தம்பதி சந்தோஷமாகி விட்டனர். தன் மகளை எதிர்பார்த்த மாதிரியே, வழக்கறிஞருக்கு படிக்க வைத்தனர். அசலில் பெண் கொடுத்தால், எப்படி பார்த்துக் கொள்வரோ, பாசமிக்க மகளை எதற்கெல்லாம் துன்புறுத்துவரோ என்ற நினைப்பில் ரகு, தன் அக்கா மகனையே, மகளுக்கு கட்டி வைத்தார். அக்கா, தன் மருமகளை, மகளாக பார்த்துக் கொள்வார் என்று, சிந்தனை செய்தே, இந்த திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி வைத்தார். ஒன்றரை ஆண்டு கடந்த நிலையில் ரகு, தாத்தாவாகப் போகிறார் என்ற செய்தி கேட்டு, ஆனந்தத்தில் தன் தெருவில் உள்ள அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். திவ்யா தாய்மையடைந்ததால், அவளது கணவரும், அத்தை, மாமா அனைவரும் அன்பாக பார்த்துக் கொண்டனர். பிரசவ தேதிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே வலி வர மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பிரசவ அறைக்கு வெளியே திவ்யாவின் கணவர், தந்தை எல்லாரும் பரிதவித்தனர். அப்போது திவ்யாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர், 'அவசரம் கொஞ்சம் வாங்க டாக்டர்' என்று, என்னை அழைத்தார். நான் திவ்யாவை பார்த்தபோது, திவ்யாவின், குழந்தை சற்றே ஆபத்தான நிலையில் இருந்தது. பனிக்குடத்திலிருந்து, தொப்புள் கொடி வழியாகத் தான் பிராணவாயு மற்றும் ஊட்டச்சத்துகள் எல்லாம் கருவிலுள்ள குழந்தைக்கு கிடைக்கும். திவ்யாவின் தொப்புள் கொடியை, மற்ற இணை உறுப்புகள் அழுத்திக் கொண்டு இருந்ததால், குழந்தைக்கு பிராணவாயு கிடைக்கவில்லை; எனவே குழந்தை சுவாசிக்க திணறியது. அப்போது நான் அக்குழந்தையை உடனே செயற்கை சுவாசக் குழாய்க்கு மாற்றி, செயற்கை சுவாசம் அளித்ததோடு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவற்றை சமநிலையில் வைக்க, 'டொபமின், டொப்பியூடமின்' மற்றும், 'அட்ரினலின்' மருந்துகளை அளித்தேன். பிரசவ சமயத்தில், பிராணவாயு தடைபடுவதால், 'ஹைப்பாக்ஸிக் இஸ்கிமிக் என்சிபிலோபதி' என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதன் விரிவாக்கம் பிராணவாயு ரத்தம், மூளை இயல்பான நிலையில் இல்லை என்பதை குறிக்கும். இந்நிலையில் குழந்தைகள் பிறப்பதை தடுக்க, பிரசவ சமயத்தில் மகப்பேறு மருத்துவரோடு, குழந்தைகள் நல மருத்துவரும் கட்டாயம் இருக்க வேண்டும். மேலைநாடுகளில் இதுபோல், 1,000 பேருக்கு, ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால், இந்தியாவில், 20 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்ல, செயற்கை சுவாசக் கருவியில் இருந்தாலே, அவர்கள் பிழைப்பதற்கு சாத்தியம் குறைவு என்று எண்ணுகின்றனர்; இது தவறு. குழந்தைகளை பொறுத்தவரை, செயற்கை சுவாசக் கருவியில் இருந்தாலும், குழந்தைகள் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது. சில குழந்தைகளுக்கு, சில மணிநேரம் அல்லது சில நாட்கள் மட்டும் செயற்கை சுவாசக் கருவியில் இருந்தால் போதும், குழந்தை பிழைத்துக் கொள்ளும். திவ்யா போன்று மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், பிரசவ சமயத்தில் மருத்துவக் கண்காணிப்பு அவசியம். திவ்யாவின் குழந்தை குணமாகி விட்டாள், வீட்டிற்கு செல்வதற்குள், ரகு இனிப்பு வாங்க கடைக்கு சென்றிருக்கிறார் என்று, அனைவரும் சந்தோஷப்பட்டனர்.சி.மணிகண்டன்பச்சிளம் குழந்தை பராமரிப்பு நிபுணர்.சென்னை. 98406 53244