எள் உருண்டை சாப்பிட்டால் மூட்டு பாதிப்பு குறையுமா?
'எனக்கு, 20 ஆண்டுகளாக, 'ஆங்கி லாசிங் ஸ்பான்டிலைட்டீஸ்' என்ற நோய் உள்ளது. தற்போது, பாதிப்பு, 10 சதவீதம் உள்ளதாகவும், வேலையில் இருந்து ரிடையர் ஆன பின், பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர். எள் உருண்டை சாப்பிட்டால், முதுகு நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தினமும், எந்த அளவு எள் உருண்டை சாப்பிடலாம், அதனால் பக்க விளைவு ஏற்படுமா?- இப்படி ஒரு கேள்வியை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, சீனிவாசன் என்பவர் எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவு டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:எலும்பை ஒட்டியுள்ள, வழுவழுப்பான இணைப்புத்திசுக்கள் தடிமனாகி, வழுவழுப்புதன்மை, நெகிழ்வுத்தன்மை குறைந்து விடும். பாதிப்பு அதிகமானால், தண்டுவட எலும்பு, மூங்கில் போன்று இணைந்து விடும்.கழுத்து, இடுப்பை பாதிக்கும்; குனிந்து வேலை செய்ய முடியாது; பின்புறம் திரும்பவே சிரமப்படுவர்; இயல்பாக வேலைத்திறன் குறையும். ஓய்வு பெற்றால் வேலைத்திறன் மேலும் குறையும் என்பதால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவருக்கு, 10 சதவீத பாதிப்பு தான் உள்ளது என்பதால், டாக்டரின் ஆலோசனை பெற்று வலி நிவாரண மாத்திரை, ஸ்டீராய்டு மாத்திரை, தசை நார் இறுக்கத்தை போக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் பாதிப்பு குறையும். பிசியோதரபி பயிற்சி, தினமும் உடற்பயிற்சி செய்வதும் நல்லது. எள் உருண்டை சாப்பிடுவதால், வலி குறையுமா என, சித்தா டாக்டர்களைத்தான் கேட்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.அண்ணா சித்த மருத்துவக் கல்லுாரி, ஆராய்ச்சித் துறை பயிற்சி டாக்டர் வீரபாபுவிடம் கேட்டால், ''உடல் சூடு அதிகமாகி, எலும்பு மஞ்சை வறட்சியால் முகுது தண்டு பாதிப்பு வந்திருக்கலாம். 'இளைச்சவனுக்கு எள் கொடு' என, கூறுவர். பொதுவாக எள்ளிற்கு, உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உண்டு. அத்துடன், எள் உருண்டையில் சேர்க்கும் வெல்லத்தில், கால்சியம் உள்ளது,'' என்றார்.''இதை சாப்பிடுவதால், எலும்பு மஞ்சையின் இணைப்புத்திசு தளர்வதால், சற்று, 'ரிலாக்ஸ்' கிடைக்கலாம். எள் உருண்டை அளவோடு சாப்பிடலாம். சத்தான உணவு; ஆனால், இவரது பிரச்னையைத் தீர்க்கும் மருந்து அல்ல; டாக்டரின் ஆலோசனை பெற்று, சிகிச்சை பெறுவதே நல்லது,'' என்றார்.