வாயு கோளாறால் மூட்டுவலி வருமா
என் வயது 48. ஏழு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. ஆறு மாதங்களாக தோள்பட்டையில் வலி உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தினால், இந்த வலி குறையுமா?இருபது சதவீத சர்க்கரை நோயாளிகள் தோள்பட்டை வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சுற்றுப்பட்டை தசையில் செல்லும் ரத்தப்போக்கு குறைவதே காரணம். உங்களுக்கு முதல் சிகிச்சை சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகும். இவ்வாறு செய்வதால் நோய் மோசமாவதை தடுக்கலாம். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு பின்னும் வலி தொடர்ந்து இருப்பவர்களுக்கு, மூட்டு நுண்துளை சிகிச்சையில், வானொலி அதிர்வு அலைகள் கொண்ட கருவிகள் மூலம், உள்ள நவீன சிகிச்சை அளித்தால் தோள்மூட்டு வலி குணமாகும்.என் வயது 32. நான்கு மாதங்களாக மணிக்கட்டு வலியால், டேபிள் டென்னிஸ் விளையாட முடியவில்லை. மணிக்கட்டில் டி.எப்.சி.சி., ஜவ்வு கிழிந்ததே இதற்கு காரணம் என்கின்றனர். இதற்கு சிகிச்சை உள்ளதா?டி.எப்.சி.சி., என்பது நம் மணிக்கட்டு மூட்டினில் செல்லும் விசைகளை சமப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கிழிசல் ஏற்பட்டு இருந்தால் மூட்டின் உறையில் வீக்கம் ஏற்பட்டு, தீராத வலி ஏற்படலாம். உங்களுக்கு டி.எப்.சி.சி.,யில் உள்ள கிழிசல் சீரமைக்கப்பட வேண்டும். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. மணிக்கட்டு மூட்டுக்கு என்றே ஒரு சிறப்பு மூட்டு நுண்துளை சிகிச்சை கருவி உள்ளது. அதைக் கொண்டு சிறு துவாரம் வழியாக சிகிச்சை அளிக்க முடியும். வலி இருவாரங்களில் முழுமையாக குணமாகும். நீங்கள் முன் போல மீண்டும் விளையாட முடியும்.அறுபது வயதான எனக்கு இரு மாதங்களாக முழங்கால் மூட்டுவலி உள்ளது. நாட்டு வைத்தியர், எனக்கு வாயுக் கோளாறு என்றார். எனவே கிழங்கு, பருப்பு உணவை தவிர்த்து வந்தேன். இருப்பினும் மூட்டுவலியில் மாற்றம் இல்லை. நான் என்ன செய்வது?வாயு கோளாறு என்பது வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்னை. பொதுவாக வாயு கோளாறுகளால் மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு இல்லை. உங்கள் மூட்டினை முறையாக ஆய்வு செய்து ரத்தப்பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்தால், மூட்டின் பிரச்னை நன்றாக தெரிந்து விடும். அதன்பின் அதற்கு சிகிச்சை வழிகள் பரிந்துரைக்கப்படும். நீங்கள் முதலில் எலும்பு மூட்டு மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறவும்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442 46436.