உள்ளூர் செய்திகள்

வாயுக்கோளாறு தோள்பட்டையை பாதிக்குமா

எனக்கு 2 ஆண்டுகளாக தோள்பட்டை வலி உள்ளது. சர்க்கரை நோயும் உள்ளது. ஏப்பமும் வந்து கொண்டே இருப்பதால், தோள்பட்டை வலிக்கு காரணம், வாயு கோளாறுதான் என்கிறார் எனது நண்பர். வாயு கோளாறு, தோள்பட்டையை பாதிக்குமா?பொதுவாக வாயு கோளாறு என்பது அஜீரணத்தை குறிப்பதாகும். அது வயிறு, குடல்சார்ந்த பிரச்னையாகும். அரிதாக சிலர் வயிற்று வலியை தோள்பட்டையில் உணர முடியும். அவ்வாறு வலி வந்தாலும், தோள்பட்டையை நன்றாக அசைக்கவும், உயர்த்தவும் முடியும். சர்க்கரை நோய் உள்ள உங்களுக்கு, தோள்மூட்டின் சுற்றுப்பட்டை தசையில் புண் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏப்பம் வருவதற்கும், தோள்பட்டைக்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் எலும்பு மூட்டு மருத்துவர், வயிறு மற்றும் குடல் பிரிவின் சிறப்பு மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.எனது வயது 58. வலது முழங்கால் தேய்மானத்துக்காக, 'குளுக்கோஸமைன்' என்ற மருந்தை, 6 மாதங்களாக எடுக்கிறேன். இதனால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளதா?குளுக்கோஸமைன் மூட்டினில் ஜவ்விற்கு ஆகாரம் போன்ற ஒரு மருந்து. சோதனைக்கூடம் பரிசோதனை முறையில், இம்மருந்தின் பயன்கள் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பக்கவிளைவுகள் மிகவும் குறைவு என்பதால், நடைமுறையில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்தினால், சர்க்கரை நோய் வருவது மிகவும் அரிதாகும். ஆதலால் இதை கண்டு அஞ்ச வேண்டாம்.எனது 11 வயது மகனுக்கு, இடுப்பு மூட்டு கிண்ணம் எலும்பின் ஒருபகுதி அழிந்து உள்ளது. இதற்கு காசநோய் காரணம் என மருத்துவர் கூறுகிறார். காசநோய் இடுப்புமூட்டில் வரவாய்ப்பு உள்ளதா?காசநோய் ஒரு பாக்டீரியா கிருமியால் உண்டாகிறது. நுரையீரலில் அதிகமாக காணப்படும் இந்த நோய், உடலில் வேறு எந்தப் பகுதியிலும் வரவாய்ப்பு உள்ளது. சிலருக்கு நுரையீரலே பாதிக்காமல் பிற இடங்களில் மட்டும்கூட வரலாம். எலும்பினில் முதுகெலும்பு பகுதியில் மிகஅதிகமாக காணப்படும். வேறு எந்த மூட்டிலும் வரலாம். இதில் நல்ல செய்தி என்னவென்றால், இந்நோயை முழுமையாக மருந்து வகையிலேயே குணப்படுத்த முடியும். நுரையீரல் காசநோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட, இருமடங்கு அதிக காலம் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.எனது வயது 38. ஆறுமாதமாக முழங்கால் மூட்டுவலி உள்ளது. கால் எலும்பின் மேற்பகுதியில், ஒரு கட்டி இருப்பதை உணர்கிறேன். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்ததில், 'டைபியா' என்னும் எலும்பில் 'ஜெயன்ட் செல் டியூமர்' என்னும் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இது புற்றுநோயா, சிகிச்சை உள்ளதா?நீங்கள் கூறிய கட்டி, எலும்பில் உள்ள ஆஸ்டியோ கிளேஸ்ட் என்னும் அணுக்களில் இருந்து உற்பத்தியாகிறது. இக்கட்டி எலும்பினை கரையச் செய்யும் தன்மை உள்ளது. பெரும்பாலும் இந்நோய் பரவுவதில்லை. ஆதலால் ஆபத்து கிடையாது. இதற்கு உள்ள சிகிச்சை அந்தக் கட்டியை அகற்றி, 'போன் கிராப்ட்' வைத்து பிளேட் போட வேண்டும். அவ்வாறு செய்தால், முழுமையாக குணமடையும் வாய்ப்பு உள்ளது.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442 46436


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !