குட்டீசுக்கு வயிற்றுப்போக்கா? தாய் பாலை நிறுத்தாதீங்க...
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு எதனால் வருகிறது; அதற்கான அறிகுறிகள் என்ன?ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல், நீராக மலம் கழித்தால் வயிற்றுப்போக்கு எனலாம். கெட்டுப்போன உணவு, பழங்கள் சாப்பிடுதல், சுகாதாரமற்ற குடிநீராலும் பாதிப்பு வரும். குடல் அடைப்பு உள்ள குழந்தைகளுக்கும், பாலில் உள்ள புரதம் ஒத்துக் கொள்ளாவிட்டாலும், வயிற்றுப் போக்கு வரும். குழந்தை சோர்வாக இருத்தல், நாக்கு வறண்டு போதல், கண்கள் உள்வாங்குதல், சிறுநீரின் அளவு குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள்.வயிற்றுப் போக்குக்கும், நீர் இழப்புக்கும் தொடர்பு உண்டா?தண்ணீர் போன்று மலம் கழிக்கும்போது, உடலின் நீர்சத்தும் சேர்ந்து வெளியேறுகிறது. உடலில் நீர் அளவு குறைவதால் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இது தான் நீர் இழப்பு என்றழைக்கப்படுகிறது. இது போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிணுங்கி சிணுங்கி அழும்; கண்கள் வறண்டு, தோல் சுருங்கி விடும்.தாக்கம் அதிகமானால், குழந்தை சோர்வாகி, மந்தமாகும். சுய நினைவை இழத்தல் ஏற்படலாம்; கண்களும் நாக்கும் வறண்டு, தோல் மீள் தன்மை இழக்கும் நிலையும் ஏற்படும்.வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு, மருந்து கடையிலிருந்து நாமாகவே மாத்திரை வாங்கித் தரலாமா? மருத்துவமனைக்கு செல்வது தான் தீர்வா?குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கக் கூடாது. மாத்திரை கொடுத்தால் வயிறு ஊதிவிடும். செரிமானம் ஆகாது. குடலின் அசைவு நின்று செயல்பாடு பாதிக்கும். வயிறு வீங்கி மூச்சுத்திணறல் ஏற்படும். அலட்சியம் காட்டினால் உயிருக்கு ஆபத்தாகி விடும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும், அதிக நீர் இழப்பு இல்லை என்றால் மருத்துவமனை செல்ல தேவையில்லை. உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நீர் ஆகாரங்களை கொடுக்கலாம். அதிக அளவில் நீர் இழப்பு ஏற்பட்டு, வறட்சி ஏற்பட்டால், மருத்துவமனைக்கு செல்வது நல்லது.ஓ.ஆர்.எஸ்., கொடுங்கள் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?'ஓரல் ரீஹைட்ரேஷன் தெரபி' என்பது தான், ஓ.ஆர்.எஸ்., என்றழைக்கப்படுகிறது. வாய் வழியாக தரும் உப்பு, சர்க்கரை கரைசல் தான் இப்படி அழைக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு தொடர்ந்தால், இந்த கரைசலை, தண்ணீரில் கலந்து தொடர்ந்து கொடுத்து வருவதால், வயிற்றுப்போக்கு குறையும். தொடர்ந்து தருவதால், நீர் இழப்பை தடுக்கலாம்.குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது; பத்தியம் போட வேண்டும் என சொல்லப்படுகிறதே?இது தவறான தகவல். தாய் பாலை ஒரு போதும் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் நீர் இழப்புக்கு வழி வகுத்துவிடும். புட்டிப்பாலை தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பால் கொடுப்பது தவறு; கொடுத்தால் வயிற்றுப்போக்கு அதிகமாகும். குழந்தைகளுக்கு பத்தியம் கூடாது. மோர், எலுமிச்சை பழச்சாறு, இளநீர் போன்ற வீட்டில் கிடைக்கும் பானங்களை தந்து, நீர் இழப்பை குறைக்கலாம்.டாக்டர் ஆர்.நாராயணபாபு,துறைத் தலைவர், குழந்தைகள் நல பகுதி,கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, சென்னை.