நடைப்பயிற்சியால் மூட்டுவலி வருமா?
எனக்கு, 6 மாதங்களாக முழங்கால் வலி உள்ளது. டாக்டர் ஆலோசனைப்படி, மூட்டுக்கு உறை அணிந்துள்ளேன். வலி சற்று குறைந்துள்ளது. இருப்பினும், காலில் வீக்கம் உள்ளது. கால் வீக்கம் இல்லாமல் இருக்க, நான் என்ன செய்ய வேண்டும்?மூட்டின் உறை இறுக்கமாக இருந்தால், பாதத்தில் இருந்து, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால், கால்வீக்கம் ஏற்படலாம். மூட்டின் உறை பெரிதாக இருந்தால், மூட்டை பாதுகாக்கும் தன்மை குறையும். ஆதலால், நீங்கள் உங்கள் மூட்டு உறையின் அளவு சரியானதுதானா என, தெரிந்து கொள்ளவும். மேலும் நீங்கள், மூட்டு உறையை, 24 மணி நேரமும் அணிய வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக, இரவு நேரங்களில், நீங்கள் தூங்கும் போது, அணியத் தேவையில்லை. இதை கடைபிடித்தால், கால் வீக்கம் நீங்கும்.என் வயது, 44. இரு ஆண்டுகளாக, உடல் பருமனாக உள்ளது. லேசான மூட்டுவலியும் உள்ளது. உடல் பருமனை குறைக்க, என்ன மருந்து எடுக்கலாம். பருமனாக உள்ளோர், நடைப்பயிற்சி செய்தால், மூட்டுவலி வரும் என்பது உண்மையா?உடல் பருமனாக இருப்போருக்கு, உடல் எடை குறைந்தால், மூட்டு வலி குறையும். உடல் பருமனை குறைக்க, மருந்துகள் கிடையாது. இதற்கென கிடைக்கும் மருந்துகள், உடல் எடையை குறைப்பதில் அதிக வெற்றி பெற்றதில்லை. பக்கவிளைவுகளும் உண்டு. உங்கள் உடலின் தேவையை விட, அதிக கலோரியை நீங்கள் உட்கொள்ளக் கூடாது. எடுக்கும் உணவில், சரியான அளவு கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, புரதச்சத்து இருக்க வேண்டும். மேலும், காய்கறிகள், கீரை வகைகள், நார்வகைகள், பழங்களை உட்கொள்ளலாம். முறையாக டயட்டீசியனை சந்தித்து, உணவு பழக்க வழக்கங்களை சீரமைத்து கொள்ளுங்கள். நீங்கள் தாராளமாக நடைப்பயிற்சி செய்யலாம். உடல் பருமன் ஆனவர்கள், நடைப்பயிற்சி செய்யக் கூடாது என்பது தவறான கருத்து.எனக்கு மூட்டுமாற்று சிகிச்சை செய்து, 3 ஆண்டுகளாகிறது. 15 நாட்களாக பல் வலி உள்ளது. பல்லின் அடியில், சீழ் வைத்திருப்பதால் பல்லை பிடுங்க வேண்டும் என, டாக்டர் கூறினார். மூட்டு மாற்று சிகிச்சை செய்தவர் பல்லை பிடுங்கலாமா?உங்கள் பல்லை பிடுங்கும் போது, பல்லில் இருந்து, கிருமிகள் செயற்கை மூட்டுக்கு பரவும் அபாயம் உள்ளது. ஆதலால், இவ்வாறு பரவாமல் தடுக்க ஆன்டிபயாடிக் மருந்தை, பல் பிடுங்குவதற்கு முன்னும், பின்னும் உட்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவும்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன், மதுரை