தேமல் பிரச்னைகளை அலட்சியமாக நினைக்காதீங்க
''தேமல் பிரச்னைகளை அலட்சியமாக நினைக்காமல் உடனே டாக்டரை அணுக வேண்டும்'' என, திண்டுக்கல் மாவட்ட தொழுநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குநர் ரூபன்ராஜ் தெரிவித்தார்.தொழுநோய் பாதிப்பை கண்டறிவது...தொழுநோய் என்பது காற்றில் பரவக்கூடியது. சாதாரண தேமல் போன்று முதல் கட்டமாக தோலில் வருகிறது. அந்த இடங்களில் முடி வளராமல் இருக்கும். உணர்ச்சிகளும் மற்ற இடங்களை காட்டிலும் குறிப்பிட்ட இடத்தில் குறைவாக இருக்கும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்து தொழுநோய்கள் பரவுவதை கண்டறியலாம். இப்பிரச்னை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் தோல் சம்பந்தபட்ட மருத்துவர்களை அணுக வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் பரவுகிறதா...தொழுநோய் பாதிப்பை பொறுத்த மட்டில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் திண்டுக்கல்லில் குறைவு தான். 2023-2024 டிசம்பர் வரை 41 பேருக்கு தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடுகளுக்கு சென்று மருந்து மாத்திரைகளும் வழங்கி வருகிறோம்.தொழுநோய் தடுப்பிற்கு திட்டங்கள் உள்ளதா...தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லுாரிகள்,பொது இடங்களில் முகாம்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அடிக்கடி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்குதல்,பரிசோதனை செய்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டு பிடித்து விட்டால் அதிலிருந்து எளிதில் வெளிவரலாம் என்பதற்காக இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.உடலில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும்...முதலில் தோல் பகுதிகளை பாதித்து படிப்படியாக நரம்பு மண்டலத்தை தாக்கும். முழுமையாக பரவியதும் கை,கால்களை செயலிழக்க செய்து மனிதர்களை முடக்கிவிடும். இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கினால் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட பின் மெதுவாக குணமடைய முடியும். பாதிப்பு தெரிந்த உடனே தோல் சம்பந்தபட்ட டாக்டர்களை அணுகவேண்டும்.தொழுநோய் பரவலை தடுக்க வழி...எல்லாருக்கும் தொழுநோய் எளிதில் பரவுவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் பரவுகிறது. பாக்டீரியாவை வெளியேற்றும் அளவிற்கு மக்கள் தங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு நல்ல காய்கறிகள்,பழங்கள்,புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எதையும் அலட்சியமாக நினைக்காமல் தேமல் போன்ற தோல் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும். தேமல் பிரச்னைகளை அலட்சியமாக நினைக்க கூடாது.உதவித்தொகை வழங்கப்படுகிறதா...1980-2024 வரை மாவட்டத்தில் 460 பேர் தொழுநோய் பாதிக்கப்பட்டு உடல் ஊனமாக உள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகையாக அரசு தரப்பில் மாதம் ரூ.2000 வழங்கப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒருமுறை ஊனத்தடுப்பு முகாம்கள் அமைத்து அவர்கள் பயன்பாட்டிற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகிறது.விழிப்புணர்வு திட்டம் உள்ளதா...ஜன.30 ல் தொழுநோய் ஒழிப்பு நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் ஜன.30 முதல் பிப்.13 வரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்கள்,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என்றார்.