உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்! - தகுதி இருந்தால் இயற்கை வரம்!

இயற்கையாக, இயல்பான, வலி இல்லாத பிரசவங்கள் நடக்க வேண்டும் என்று தான், மகப்பேறு டாக்டர்களான நாங்கள் விரும்புகிறோம். நார்மல் டெலிவரிக்கும், நேச்சுரல் எனப்படும், இயற்கை முறை பிரசவத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நார்மல் டெலிவரியில், மருத்துவமனையில் வைத்து, வலி அதிகரிக்க மருந்து கொடுப்பது, 'சலைன்' போடுவது என, எல்லா மருத்துவ முறைகளையும் செய்வோம். ஆனால், இயற்கை பிரசவத்தில், தானாகவே வரும் வலியில், தானாகவே பிரசவிப்பது என்பதால், நாங்கள் எவ்வித மருந்துகளையும் பயன்படுத்துவதில்லை.இயற்கை பிரசவம் வேண்டும் என்று விரும்பும் பெண்கள், வீட்டில் வைத்து, தாங்களாகவே பிரசவம் பார்க்கக் கூடாது. சமீபத்தில், திருப்பூரில் நடந்த சம்பவத்தை பார்த்தால், அந்தப் பெண் கர்ப்பம் தரித்த நாள் முதல், எந்த பரிசோதனைக்கும் போகவில்லை. 'யூ டியுப்'பை பார்த்து, கணவரே பிரசவம் பார்த்துள்ளார். மருத்துவ தொழில்நுட்பம் எளிதாக கிடைக்கும் இக்காலத்தில், இதை போன்ற முட்டாள்தனம், அறிவீனம் வேறு இல்லை.ஒரு பிரசவத்தில் பல விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு உள்ளது. குழந்தையின் வளர்ச்சி, எடை, அம்மாவின் உடல் நிலை, குழந்தை மிதக்கும் திரவம் உட்பட அனைத்தும் நன்றாக, இயல்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எந்தவித, 'ரிஸ்க்'கும் இல்லை என்று தெரிந்த பின், இயற்கை பிரசவத்திற்கு போகலாம்.இயற்கை பிரசவம் வேண்டும் விரும்பும் பெண்கள், கர்ப்பம் என்று உறுதியானவுடன், டாக்டரிடம் தங்கள் விருப்பத்தை சொல்லி விட வேண்டும். இந்தப் பெண்கள், கர்ப்ப காலம் முழுவதும், உடல் எடை அதிகரிக்காமல், அதேநேரம் ஊட்டச்சத்தும் குறையாமல், 'டயட்'டை பின்பற்ற வேண்டும். கர்ப்ப காலத்தில், உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உடல் எடை அதிகரித்தால், நீரிழிவு, ரத்த அழுத்தம் வரும். பிரசவத்தின் போது, சரியான நிலையில் படுக்க முடியாது.ஒவ்வொரு முறை பரிசோதனைக்கு வரும் போதும், உடற்பயிற்சி செய்கின்றனரா, உடல் எடை, இரும்புச் சத்து அளவு, ரத்த சர்க்கரை அளவு போன்ற அவசியமான விஷயங்கள் எப்படி உள்ளன என்று கண்காணிப்போம். இயற்கை பிரசவம் கேட்டனர் என்பதற்காக, அதற்கேற்ற உடல் தகுதி இல்லாவிட்டால், சிபாரிசு செய்யக் கூடாது.எட்டு மாதங்களுக்கு பின், 'பட்டர்பிளை' எக்சர்சைஸ், மூச்சுப் பயிற்சி உட்பட, அந்த சமயத்தில் செய்ய வேண்டிய பயிற்சிகளை செய்யச் சொல்வோம். எல்லா நிலையிலும், 'பிட்'டாக இருக்கின்றனர் என்று உறுதி செய்த பின், இயற்கை பிரசவத்தை அனுமதிப்போம்.பத்திரிகையில், இன்டர்நெட்டில் படித்து, கடைசி நிமிடத்தில் வந்து, இயற்கை முறையில் குழந்தை பெற ஆசை என்று வருவர். என்ன என்றே தெரியாமல், புத்தகத்தில் படித்த, கேள்விப்பட்ட விஷயத்தை செய்து பார்க்கலாம் என்று வருபவர்கள், அது பற்றிய தெளிவு, தயாரிப்பு இல்லாமல், புரிந்து கொள்ளாமல், முயற்சி செய்து பார்க்கலாம் என்று கேட்பர்.என்னை முதலில் பார்க்க வரும் போதே, எட்டு மாதங்கள் ஆகியிருக்கும். அவர்களிடம், 'உங்களால் நிச்சயம் முடியாது; 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம்' என்று சொல்லி விடுவேன்.இயற்கை, நார்மல், சிசேரியன் என்ற எந்த முறையில் வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், பயிற்சி பெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் மட்டும் பிரசவம் நடக்க வேண்டும் என்பதை, நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.டாக்டர் கவிதா கவுதம்மகப்பேறு மருத்துவர், சென்னை.drkavithagautham@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்