தடுப்பூசிகளை தவிர்க்க வேண்டாம்!
கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தொற்று ஏற்பட்டால், மிகப் பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில், எந்தவித பயமும் தேவையில்லை.தடுப்பு மருந்துக்கு தானே இத்தனை நாளும் காத்திருந்தோம். நம் நாட்டில் இருக்கும் இரண்டு தடுப்பு மருந்திலும், பக்க விளைவுகள் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. புதிய வைரஸ் தொற்று துவங்கிய சில மாதங்களிலேயே, தடுப்பு மருந்து வந்து விட்டது. இது, எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும்? அவசர கதியில் தயாரித்து இருப்பரோ என்ற சந்தேகம் உள்ளது.இது அவசியம் இல்லை. முந்தைய காலங்களில், அம்மை போன்ற வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, 20 ஆண்டுகள் ஆகின. இந்த கால அளவு படிப்படியாக குறைந்து, தற்போது ஒரு ஆண்டிற்குள் தயாரிக்க முடிந்திருக்கிறது. அந்த அளவிற்கு நவீன மருத்துவ, அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. புதிதாக வரும் நுண்ணுயிரியின் மரபணு அமைப்பை, ஒரு மாதத்திற்குள் கண்டுபிடிக்க முடிகிறது. மரபணு அமைப்பை புரிந்து கொண்டால், அதிலிருந்து தடுப்பு மருந்தை எளிதாக தயாரிக்க முடியும்.கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டுமே முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளி வந்துள்ளன. பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிரியில் இருந்து தான், தடுப்பு மருந்து தயாரிக்கப்படும். இந்த இரண்டு தடுப்பு மருந்தும் இதே முறையில் தான் வந்திருக்கின்றன. எந்த ஊசி போட்டாலும், அவரவர் உடல் அமைப்பை பொறுத்து, சிலருக்கு காய்ச்சல், தலைவலி போன்ற மிதமான பாதிப்புகள் வரலாம்; பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். எனவே, தடுப்பூசி போடுவதை தவிர்க்க வேண்டாம்.டாக்டர் வி.மோகன்தலைவர், டாக்டர் மோகன் நீரிழிவு மையம். 89391 10000.