உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்!: இது இயற்கையான விஷயம் தான்... நோய் இல்லை!

மார்பகத்தில் வலி என்பது, பெரும்பாலான பெண்கள், பொதுவாக சொல்லக்கூடிய தொந்தரவு. என்னிடம் வரும் நிறைய பெண்கள், 'இரண்டு மார்பகங்களும் ரொம்ப வலிக்கிறது டாக்டர், தாங்கவே முடியவில்லை' என, சொல்வர்.பொதுவாக, இரண்டு மார்பகங்களிலும் வலி இருக்கிறது எனச் சொன்னால், 'மாதவிடாய் வருவதற்கு முன் வலி வரும். மாதவிடாய் வந்தபின் வலி குறைந்து விடும். இது, மிகவும் இயற்கையான விஷயம்.நம் உடம்பில், மாதந்தோறும் மாதவிடாய் வருவதற்காக, சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். மாதவிடாய் ஏற்பட்டதில் இருந்து, அடுத்த, 14 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். 14வது நாளில் இருந்து தான், சினைப்பையில் இருந்து, கருமுட்டை முதிர்ச்சியடையத் துவங்கும். இந்த சமயத்தில் இருந்து, அடுத்த மாதவிடாய் வரும் நாள் வரையிலும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால், மாதவிடாய் வருவதற்கு இரண்டு வாரங்கள் முன்பிருந்தே, இரண்டு பக்கமும் மார்பகங்கள் கனமாக இருக்கும். இது, நோய் கிடையாது. ஹார்மோன் சுரப்பினால் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை. இந்த வலி எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. தனிப்பட்ட நபர்களின் உடல்வாகைப் பொறுத்து, சிலருக்கு அதிகமாக இருக்கும்; சிலருக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு வலியே இருக்காது. இதுக்கு சிகிச்சை எதுவும் இல்லை. டாக்டர்கள், விட்டமின், 'ஈ' மாத்திரைகள் தருவர். 'டாக்டரைப் போய் பார்த்தோம். மாத்திரை கொடுத்தாங்க' என்ற திருப்திக்கே, வலி குறைந்த மாதிரி இருக்கும்.ரொம்ப முடியவில்லை எனச்சொன்னால், அதற்கு சில மாத்திரைகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், பக்க விளைவுகளும் கூடவே இருக்கின்றன. இந்த வலிக்கு இன்னொரு முக்கியமான காரணம், தசைகளில் ஏற்படும் வலி. மார்பகங்கள், மார்பு பகுதியில் உள்ள தசைகளின் மேல் இருக்கிறது.இந்தப் பகுதியில் உள்ள தசைகள், தோள்பட்டை, கை களின், இயக்கத்திற்கு முக்கியமானவை. நாம், சில சமயங்களில், திடீரென்று உடற்பயிற்சி செய்கிறோம்; யோகா செய்கிறோம்; எடை துாக்குகிறோம்; 'டிராவல்' செய்கிறோம்; பெட்டியை துாக்குகிறோம். இது போன்ற சமயங்களில் தசைகளில் பிடிப்பு ஏற்படுகிறது. தசைகளில் ஏற்படும் இந்தப் பிடிப்பு, வலி, தசைகளின் மேல் இருக்கும் மார்பகங்களில் தான் தெரியும். அதை, மார்பகத்தில் வலி என, நினைத்து பயந்து விட வேண்டாம். எந்தப் பக்கத்தை அதிகமாக பயன்படுத்துகிறோமா, அந்த பகுதி மார்பகத்தில் வலி தெரியும்.வலி இதனால் தான் என, தெரிந்தால், ஐஸ் கட்டி ஒத்தடம், வலி நிவாரணி களிம்பு தடவச் சொல்லுவோம். தேவைப்பட்டால், மாத்திரை தருவோம். ஓய்வாக இருந்தால், ஒரு வாரம், 10 நாட்களில் சரியாகிவிடும்; வேறு ஒன்றும் தேவைப்படாது.சில பேருக்கு, மார்பகத்தில் தொற்று இருந்தால், வலி வரும். பால் சுரப்பிகளில், பால் கொடுக்கும் சமயத்தில், பால், கட்டி வலி வரலாம். இது பற்றியும், விளக்கமாக பின்னர் சொல்கிறேன்.டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணாமார்பக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர், சென்னை.selvi.breastclinic@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !