உள்ளூர் செய்திகள்

காபி குடித்தால் சர்க்கரை பாதிப்பு குறையும்

காலையில் காபி குடிக்காவிட்டால், அன்றைய தினமே வீண் என்ற மனநிலை பலரிடமும் உள்ளது. சமீபத்தில் பெரிய அளவில் நடந்த ஒரு மருத்துவ ஆய்வில், தினமும் இரு கப் காபி குடித்தால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு குறைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது* என் தந்தையின் வயது 81. சமீபத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 'ஆஞ்சியோகிராம்' செய்ய வேண்டும் என, டாக்டர் கூறுகிறார். இந்த வயதில் செய்வதால், ஏதும் பலனுண்டா?இதயத்தில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால் அது, மாரடைப்பு, நெஞ்சுவலியாக வெளிப்படுகிறது. இந்த ரத்த நாளங்களில் எந்த இடத்தில், எத்தனை சதவீதம் அடைப்பு உள்ளது என்பதை கண்டறியும் பரிசோதனை தான் ஆஞ்சியோகிராம். இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில், 81 வயதில் ஆஞ்சியோகிராம் என்பது, ஒரு பெரிய விஷயமே இல்லை. ஏனெனில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, அதன் மூலம் எந்த இடத்தில் அடைப்பு உள்ளது எனக் கண்டறிந்து, அதை பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மூலம் எளிதில் சரிசெய்ய இயலும். உங்கள் தந்தைக்கு வந்துள்ளது, மருத்துவ சிகிச்சை மூலம் எளிதில் நலம் பெறக் கூடிய வியாதி என்பதால், அவருக்கு, 81 வயது என்பதை, நீங்கள் பொருட்படுத்த தேவையே இல்லை. அவருக்கு சிகிச்சை அளித்து, பூரண குணம் பெறச் செய்வது உங்கள் கடமை.* நான் ஒரு காபி பிரியன். தினமும், நான்கு கப் காபி அருந்துகிறேன். இதனால் பாதிப்பு வருமா?காபி என்பது ஓர் அற்புத பானம். காலை எழுந்தவுடன், காபி குடிக்கும் பழக்கம், உலகில் பலரிடம் உள்ளது. காலையில் காபி குடிக்காவிட்டால், அன்றைய தினமே வீண் என்ற மனநிலை பலரிடமும் உள்ளது. சமீபத்தில் பெரிய அளவில் நடந்த ஒரு மருத்துவ ஆய்வில், தினமும் இரு கப் காபி குடித்தால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு குறைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. காபியில் சிறிதளவு பாலுடன் சர்க்கரை இல்லாமல், தினமும், 2 கப் அருந்தினால், சர்க்கரை நோய் வரும் தன்மை, 11 சதவீதம் அளவிற்கு குறைக்கப்படுகிறது. காபி குடித்துக் கொண்டே இருப்பவர்கள், திடீரென அப்பழக்கத்தை நிறுத்தினால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் தன்மை 17 சதவீதம் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் தொடர்பான நோய்களின் தீவிரமும் குறைக்கப்படுகிறது. எனவே தினமும், ஒருவர் இரு கப் காபியை, சிறிதளவு பாலுடன், சர்க்கரை இன்றி குடிப்பது, உடலுக்கு மிகச்சிறந்த பழக்கம்.* ஓராண்டாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அம்லோடிபின் 5 மி.கி., மருந்தை எடுக்கிறேன். நான் தினமும், 6 கி.மீ., நடைபயிற்சி மேற்கொண்டு, உணவில் உப்பை நன்கு குறைத்து, ரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்த மாத்திரையை நானாக நிறுத்திக் கொள்ளலாமா?உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்வியல் முறை மாற்றங்களான, தினமும் உடற்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது அத்தியாவசியமானவை. இருப்பினும், பலருக்கு மருந்துகளும் தேவைப்படுகின்றன. ஏனெனில் தற்போதுள்ள மருத்துவ வழிகாட்டுதல்படி, ஒருவருக்கு எந்த வயதிலும், எந்தத் தருணத்திலும் ரத்த அழுத்தம் 140/90 க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுக்கும் பலருக்கு மருந்தை நிறுத்தினால், ஏற்கனவே இருந்த அளவை விட ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீங்களாகவே மருந்தை நிறுத்துவது தவறு. உங்கள் டாக்டரை ஆலோசித்து, மருந்தை தொடர வேண்டுமா, எடுத்து வரும் அளவில் சிறிது குறைக்க இயலுமா என அறிய வேண்டும். தற்போது, ரத்த அழுத்தத்திற்கு, பக்க விளைவு இல்லாத அற்புத மருந்துகள் பல உள்ளன. எனவே நீங்கள் மருந்து எடுப்பது கண்டு அஞ்சத் தேவையில்லை.டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !