ரசம் குடித்தால் கூட வயிற்றுக் கோளாறு வரலாம்!
'இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்' - ஐ.பி.எஸ்., என்ற செரிமானக் கோளாறு பொதுவான பிரச்னையாக இருந்தாலும், சில வகையான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு இப்பிரச்னை வரும் வாய்ப்பு அதிகம். காரணங்கள் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பசியை அனுசரித்து சாப்பிடாதது இவையெல்லாம் இப்பிரச்னையை துாண்டலாம். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், செரிமான மண்டலத்திற்கும், மனதிற்கும் உள்ள தொடர்பு. சரியான துாக்கம் இல்லாமல் படபடப்பாக இருப்பது, மனச் சோர்வு, மன அழுத்தம் இருந்தால், இப்பிரச்னை வரும் வாய்ப்பு அதிகம்.இது தவிர, அவசர அவசரமாக சாப்பிடுவது, அதிக சூடான உணவுகளை சாப்பிடுவது, நன்கு மென்று சுவைத்து சாப்பிடாமல் இருப்பது, உணவில் கவனம் இல்லாமல் சாப்பிடுவது போன்றவற்றால் இப்பிரச்னை வரலாம்.பிரச்னைக்கான அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. முக்கால்வாசி பேருக்கு, இடது பக்க வயிற்றில் வலி, வயிறு உப்புசம், மலச்சிக்கல் இருக்கும். 10 சதவீதம் பேருக்கு, ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி, சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும் நிலையில், உணவு சாப்பிட்டதும் அழுத்தம் காரணமாக மலம் வருகிறது.ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு தீர்வு உள்ளது. பிரச்னையின் தன்மை அடிப்படையில், தனி நபரின் அறிகுறிகள், துாண்டும் காரணிகளின்படி சிகிச்சை மாறுபடும். பிரச்னையை துாண்டும் காரணி அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு காபி பிரச்னையைத் துாண்டலாம். காரம், புளிப்பு சிலருக்கு பிரச்னையைத் தரலாம். சிலருக்கு ரசம் சாப்பிட்டால் கூட ஐ.பி.எஸ்., வரலாம்.நவீன மருத்துவத்திலும் சரி; ஆயுர்வேதத்திலும் சரி; தனி நபரின் அறிகுறிகள், தேவைக்கு ஏற்பவே சிகிச்சை தர முடியும். குறிப்பிட்ட மருந்தை கொடுத்தால் சரியாகி விடும் என்று சொல்லவே முடியாது.குறைந்தது ஒரு மாதம், அதிகபட்சம் ஐந்து மாதங்களில் சரி செய்ய முடியும்.இது, வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னை என்பதால், அதை தெரிந்து சரி செய்தாலே பிரச்னையை கட்டுப்படுத்தலாம்.டாக்டர் ஹரி கிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர், சென்னை89399 33150